கண்ணதாசன் பாடலையே நிராகரித்த பிரபல நடிகை… கவியரசரை கூனி குறுக வைத்த சம்பவம்..
தமிழ் சினிமா இசையுலகில் பல காலமாக கவியரசராக கோலோச்சிய கண்ணதாசனின் கவிபுலம் குறித்து நாம் அனைவரும் அறிவோம். அவரது பாடல் வரிகளில் மனதை பறிக்கொடுத்தவர்கள் பலர். துன்பமானாலும் சரி, இன்பமானாலும் சரி, கவியரசரின் பாடல்கள்தான் துணை என்று இருந்த காலமும் உண்டு. இப்போதும் அவரது பாடல்களில் வரும் சிந்தனையூட்டும் வரிகளை மெச்சிப் புகழாதவர்களே கிடையாது.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பலருடைய திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய கண்ணதாசன், பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் தென்றல் என்ற இதழையும் நடித்தி வந்தார் கண்ணதாசன். அரசியல் ஈடுபாடும் உண்டு. இவ்வாறு சினிமா, இலக்கியம், கவிதை, அரசியல் என பல தளங்களில் கால் பதித்தவராக விளங்கினார் கண்ணதாசன்.
கண்ணதாசன் ஒரு கட்டத்தில் புகழின் உச்சியை தொட்டிருந்தாலும், அவர் சினிமாவுக்கு வந்த புதிதில் அவருக்கு நேர்ந்த துன்பங்கள் பல உண்டு. இன்று நாம் கவியரசை கொண்டாடினாலும் ஒரு காலத்தில் அவரது பாடல்களை நிராகரித்த நாட்களும் உண்டு. அப்படி தமிழ் சினிமாவின் ஒரு பிரபல நடிகை கண்ணதாசனின் பாடலை நிராகரித்த சம்பவம் ஒன்றை பற்றி பார்க்கலாம்.
1952 ஆம் ஆண்டு பானுமதி, எஸ்.பாலசந்தர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ராணி”. இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சி.ஆர்.சுப்புராமன். அந்த காலகட்டம், கண்ணதாசன் கவியரசர் என்று அறியப்படாத காலகட்டம்.
அப்போது “ராணி” திரைப்படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதச் சொல்லி இசையமைப்பாளர் சுப்புராமனிடம் இருந்து கண்ணதாசனுக்கு அழைப்பு வந்தது. உடனே சுப்புராமனின் ஸ்டூடியோவுக்கு சென்றார் கண்ணதாசன். அங்கே சுப்புராமன் ஒரு மெட்டுப்போட, அந்த மெட்டுக்கு ஏற்றவாறு பாட்டு எழுதினார் கண்ணதாசன். அப்பாடலை நடிகை பானுமதிதான் பாடுவதாக இருந்தது.
இந்த நிலையில் பானுமதி அங்கே வந்து கண்ணதாசன் எழுதிய பாடலை பார்த்தார். “என்ன பாஷை இது?” என அப்பாடலை பார்த்து கேட்டாராம் பானுமதி. அப்படி அவர் கேட்டது கவியரசரை கூனி குறுக வைத்தது. அதன் பின் “இப்பாடல் நன்றாகவே இல்லை. இந்த பாடலை என்னால் பாட முடியாது” என கூறிவிட்டு சென்றுவிட்டாராம் பானுமதி. அதன் பின் வேறு ஒரு பாடலை எழுதினாராம் கண்ணதாசன். ஆனால் அந்த பாடலும் சரிவரவில்லையாம். ஆதலால் அந்த பாடல்களை வேறு ஒரு கவிஞரை வைத்து எழுதியிருக்கிறார்கள்.