மகள் ஹீரோயினாக தாயார் வேண்டுதல்...கைமேல் பலன் கொடுத்த குருவாயூரப்பன்...யார் அந்த மகள்?

by sankaran v |   ( Updated:2022-11-01 17:32:07  )
மகள் ஹீரோயினாக தாயார் வேண்டுதல்...கைமேல் பலன் கொடுத்த குருவாயூரப்பன்...யார் அந்த மகள்?
X

Konjum kumari

ஆயிரம் திரை கண்ட ஆச்சி என்றால் டக்கென்று நினைவுக்கு வருபவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக மாறிய மனோரமா தான்.

இவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித் தான் ஆக வேண்டும். நடிகைகளில் இவரை பொம்பளை சிவாஜி என்று அழைப்பர். அந்த அளவு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்துவார். அந்த இனிய தருணத்தை அவரே சொல்லக் கேட்போம்.

Manorama

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்காக சில வெளிப்புறக் காட்சிகளைக் கேரளாவில் எடுத்தார்கள். அதற்காக திருச்சூரில் நாங்கள் எல்லோரும் தங்கி இருந்தோம்.

திருச்சூருக்கு அருகில் தான் பிரபல புண்ணிய ஸ்தலமான குருவாயூர் இருக்கிறது. ஒருநாள் அங்கு போய் வரத் திட்டமிட்டு நாங்கள் கிளம்பினோம். என்னுடன் என் தாயாரும் வந்திருந்தார். கோவிலுக்குள் சென்று, குருவாயூரப்பனை வணங்கி விட்டு வலம் வந்து கொண்டிருந்தோம். கோவிலைச் சுற்றிச் சிறு விளக்குகள் வரிசையாகப் பின்னப்பட்டு இருந்தன.

Manorama2

யாராவது ஏதாவது நினைத்துக் கொண்டு அது பலித்து விட்டால் இந்த விளக்குகளுக்கு எண்ணை திரி இட்டு ஏற்றி வைப்பார்கள். அன்று எங்களுடன் வந்த ஒருவர் அவற்றைப் பற்றி விளக்கிக் கொண்டு இருந்தார்.

என் தாயார் அதை எல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டார். பின்பு சுவாமிக்கு எதிரே நின்று கண்களை மூடிக்கொண்டு எதையோ வேண்டிக் கொண்டார்.

என்ன வேண்டினார் என்பதை அவர் என்னிடமும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்தது. திருச்சூரில் இருந்து நாங்கள் சென்னை வந்தோம். நாங்கள் வந்த அதே நாள், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்சில் இருந்து என் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.

அதை அவசரம் அவசரமாகப் பிரித்துப் படித்தேன். என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. உன்னை எங்களது அடுத்த படமான கொஞ்சும் குமரியில் கதாநாயகியாகப் போட்டு இருக்கிறோம். உடனே வந்து பார்க்கவும் என்று எழுதி இருந்தனர்.

Guruvayoorappan

எல்லாம் குருவாயூரப்பன் அருள்..! விளக்குப் போட்டு விட வேண்டியது தான் என்று மனமுருக சொன்னார் தாயார்.

உன்னைக் கதாநாயகியாக ஏதாவது ஒரு படத்திலாவது நான் இறப்பதற்குள் பார்த்து விட வேண்டும் என்று என் தாயார் அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. எனக்கு அதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் என் தாயாருக்கு இதில் அபார நம்பிக்கை இருந்தது.

அன்றைய தினம் குருவாயூரில் இதைத் தான் நான் குருவாயூரப்பனிடம் வேண்டினேன் என்றும் சொன்னார். பிரார்த்தனைக்குப் பலன் உடனே கிட்டும் என்பதை தாயாரும் எதிர்பார்க்கவில்லை.

கொஞ்சும் குமரி திரைப்படத்தை ஜி.விஸ்வநாதன் இயக்கினார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்தது. 1963ல் வெளியான இந்தப் படத்தில் இந்திரா தேவி, மனோரமா, மனோகர், ராமதாஸ் உள்பட பலர் நடித்தனர். இதில் மனோரமா அல்லி என்ற கதாபாத்திரத்தை ஏற்று கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story