சிக்னல் கொடுத்த இயக்குனர்... கமல் கொடுத்த அதிர்ச்சி முத்தம்… பிரபல நடிகை பகிர்ந்த சர்ச்சை சம்பவம்…

by Arun Prasad |
சிக்னல் கொடுத்த இயக்குனர்... கமல் கொடுத்த அதிர்ச்சி முத்தம்… பிரபல நடிகை பகிர்ந்த சர்ச்சை சம்பவம்…
X

திரையுலகில் உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசன், ஒரு முத்த நாயகனும் கூட. அவரது திரைப்படங்களில் இடம்பெறும் முத்தக்காட்சிகள் மிகவும் பிரபலமானவை.

சினிமா வட்டாரங்களில் “கமல் படத்தில் கண்டிப்பாக ஒரு முத்தக்காட்சி” இருக்கும் என்று ஒரு வதந்தியே உண்டு. அந்த அளவிற்கு அவரது திரைப்படங்களில் மிகவும் ரசிக்கத்தகுந்தவாறு சில முத்தக்காட்சிகள் இடம்பெறும்.

1980களில் கமல்ஹாசன் இளம்பெண்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர். ஆதலால் அவரது திரைப்படங்களை அப்போது உள்ள இளம்பெண்கள் மிகவும் விரும்பி பார்ப்பார்கள். எனினும் அவரது திரைப்படங்களில் இடம்பெறும் முத்தக்காட்சிகள் சில நேரங்களில் சர்ச்சைகளையும் கிளப்புவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு சர்ச்சையான சம்பவத்தைத்தான் பிரபல நடிகை ரேகா பகிர்ந்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ரேகா, ரேவதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “புன்னகை மன்னன்”. இத்திரைப்படத்தை பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இளையராஜா இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட். குறிப்பாக “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்”, “என்ன சத்தம் இந்த நேரம்” போன்ற பாடல்கள் அனைத்தும் கிளாசிக் பாடல்கள்.

ரேகாவும், கமலும் அருவியில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும்போது வருகிற பாடல்தான் “என்ன சத்தம் இந்த நேரம்” பாடல். இப்பாடலில் இருவரும் அருவியில் குதிப்பதற்கு முன்பு கமல் ரேகாவிற்கு முத்தம் கொடுப்பார். இந்த நிலையில் இப்பாடலை படமாக்கும்போது தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் ரேகா.

அதாவது அந்த முத்தகாட்சி குறித்து இயக்குனர் பாலசந்தர் ரேகாவிடம் அனுமதியே கேட்கவில்லையாம். அப்படி ஒரு காட்சி எடுக்கப்போகிறார்கள் என ரேகாவிற்கு தெரியாதாம். படப்பிடிப்பில் இருவரும் குதிக்கப்போவதற்கு முன் இயக்குனர் பாலசந்தர் கமலிடம் “நான் சொன்னது ஞாபகம் இருக்குதா”? என கூறியிருக்கிறார்.

அதன் பின் கமல் ரேகாவிடம் “சாகும்போது கண்ண திறந்துகிட்டா சாகப்போற. கண்ண மூடிக்கோ” என கூறியிருக்கிறார். ரேகா கண்ணை மூடியவுடன் கமல் அவருக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். அந்த காட்சியை படமாக்கியபின் ரேகா பாலசந்தரிடம் “சார், கமல் எனக்கு முத்தம் கொடுத்துவிட்டார். இதனை என்னுடைய தந்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்” என கூறியிருக்கிறார். அதற்கு பாலசந்தர் “குழந்தைக்கு முத்தம் கொடுத்த மாதிரி நினைச்சிக்கோ” என பதிலளித்தாராம்.

ரேகா இந்த சம்பவத்தை அப்பேட்டியில் பகிர்ந்துகொண்ட பின் இணையத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. “புன்னகை மன்னன் திரைப்படத்தில் ரேகா நடித்தபோது அவருக்கு 18 வயது கூட பூர்த்தியடையவில்லை. ஆதலால் இது மிகப்பெரிய குற்றம்” என இணையத்தில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story