நடிச்சா ஹீரோயினாதான் நடிப்பேன்... இல்லேன்னா வேணாம்... அப்பவே கெத்து காட்டிய ஸ்ரீபிரியா
70 மற்றும் 80களில் தமிழ்சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீபிரியா. மனதில் பட்டதை பட்டென்று பேசக்கூடிய துணிச்சல் மிக்கவர். 1974ல் பி.மாதவன் இயக்கத்தில் முருகன் காட்டிய வழி படத்தில் அறிமுகமானார்.
கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். ரஜினி, கமல் உடன் நிறைய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இருவரது படங்களிலும் சேர்ந்து 60க்கும் மேல் நடித்துள்ளாராம்.
இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் ஆகிய முந்தைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார். 350 படங்கள் நடித்துள்ளார். மலையாள நடிகர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
முதல் படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று அவரே சொல்லக் கேட்போம்.
எனக்கு நடிக்க ஆசை இல்லை. என் அக்கா தான் அதற்காக பல்வேறு பயிற்சிகளைப் பெற்றார். ஒரு நாள் அக்காவுக்கு போட்டோ ஷூட் எடுத்தாங்க. அப்போ என்னையும் ஒரு போட்டோ எடுத்தாங்க.
அப்போ நான் ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருந்தேன். அருண்பிரசாத் பிரசாத் பிலிம்ஸ் புதுமுகம் தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்போ டைரக்டர் மாதவன் சாரிடம் என் போட்டோவக் காட்டினாங்க. அப்படி தான் மாணிக்கத் தொட்டில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதுல 5 பெண்களில் ஒருவராக நடிக்க சொன்னாங்க.
நான் நடிச்சா ஹீரோயினா தான் நடிப்பேன்.. இல்ல நடிக்க மாட்டேன்னு சொன்னேன். அப்படி சொன்னதும் அவரு நீ சினிமாவில் வரவே முடியாதுன்னாரு. அப்புறம் 2 மாதம் கழித்து என்னை அழைத்துப் பேசினார்.
உன் தைரியம் எனக்குப் பிடிச்சிருந்தது. அந்த மாதிரி ஒரு பொண்ணு தான் கதாபாத்திரத்துக்குத் தேவை. இதுல ஹீரோயின் இல்லை. ஹீரோவோட தங்கையா நடிக்கணும்னு சொன்னார். அப்படி தான் நான் முருகன் காட்டிய வழி படத்துல நடிக்க ஆரம்பிச்சேன்... இவ்வாறு ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.
நீயா, நட்சத்திரம், தாய் மீது சத்தியம், ஆட்டுக்கார அலமேலு, வாழ்வே மாயம், பைரவி, அவள் அப்படித்தான் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.