Cinema History
விஜயகாந்துடன் நடிக்க மறுத்த டாப் நடிகைகள்!.. சொன்ன காரணம்தான் ஹைலைட்!..
சினிமாவில் பெரிய ஹீரோ ஆகும் ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி அலைந்து, பல இடங்களில் அவமானப்பட்டு வாய்ப்புகளை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர் விஜயகாந்த். துவக்கத்தில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. வில்லன், இரண்டு ஹீரோக்களில் ஒருவர் என வேடங்கள் வந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்த பின்னரே அவரின் சினிமா வாழ்க்கை மாறியது.
அதேநேரம், விஜயகாந்த் நிறைய படங்களில் நடித்து ஹிட் படங்களை கொடுத்த பின்னரும் கூட அப்போது முன்னணி நடிகையாக இருந்த பலரும் அவருடன் ஜோடி போட்டு நடிக்க முன்வரவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம் ‘விஜயகாந்த் பயங்கர கருப்பாக இருக்கிறார். ஒரு ஹீரோவை போலவே அவர் இல்லை. அவருடன் நடித்தால் என் மார்க்கெட் போய்விடும்’ என்பதுதான். இப்படி பல நடிகைகள் அவருடன் நடிக்க மறுத்துள்ளனர்.
விஜயகாந்துடன் பல படங்களில் நடித்து அவரை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போன நடிகை ரதிகாவே முதலில் இதே காரணத்தை கூறி விஜயகாந்துடன் நடிக்க மறுத்தார். அதன்பின் அவரை சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தனர். அதேபோல், அப்போது முன்னணி கதாநாயகிகளாக இருந்த நதியா, அம்பிகா, ராதா ஆகியோரும் விஜயகாந்துடன் நடிக்க சம்மதிக்கவில்லை.
அதன்பின் விஜயகாந்தும் பெரிய ஹீரோதான் என சம்மதித்து அவர்கள் எல்லாருமே நடித்தனர். பூமலை பொழியுது என்கிற படத்தில் விஜயகாந்துடன் நதியா நடித்தார். அதேபோல், தழுவாத கைகள் துவங்கி, புதிய சகாப்தம், தண்டனை, வேலுண்டு வினையில்லை, புதிய தீர்ப்பு ஆகிய படங்களில் விஜயகாந்துடன் அம்பிகா நடித்தார்.
அதேபோல், அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு, மீனாக்ஷி திருவிளையாடல், உள்ளத்தில் நல்ல உள்ளம், நினைவே ஒரு சங்கீதம் ஆகிய படங்களில் அம்பிகாவின் தங்கை ராதா விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.