மூஞ்சிலே முழிக்க மாட்டேன்னு சொன்ன வடிவேலு.. மீண்டும் அதே நடிகருடன் கைகோர்க்கும் சம்பவம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்களுடன் ஆரம்பகாலங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் பயணித்து வந்த வடிவேலு ஏகப்பட்ட அவமானங்களை தாண்டித்தான் இந்த சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார்.குச்சி மாதிரி உடம்பு, கரு நிறமான தோல் என பல விமர்சனங்கள் இவர்மீது முன்வைக்கப்பட்டன.
ஆனால் அத்தனை விமர்சனங்களையும் ஒரு சவாலாக ஏற்று தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று வைகைப்புயல் என யாவரும் அழைக்கும் அளவுக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்திருக்கிறார். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் வடிவேலு. இவரின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் பெரிய அளவு மக்களை சென்றடைந்தது.
அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வடிவேலுவை நோக்கி வரத் தொடங்கியது. அடுத்ததாக சுந்தர் சியுடன் ஒரு படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே வடிவேலு நடிக்க இருந்த படத்தில் வடிவேலுவை கேட்காமல் அந்த கதாபாத்திரத்தில் சந்தானத்தை நடிக்க வைத்ததன் மூலம் சுந்தர் சிக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.
அதிலிருந்தே சுந்தர் சியின் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என ஒரு முடிவெடுத்திருந்தாராம் வடிவேலு. குஷ்பு எல்லாம் போய் சமாதானம் செய்தும் வடிவேலுவை காம்ப்ரமைஸ் செய்ய முடியவில்லையாம். இந்த நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணி உருவாக இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே வெற்றிக் கூட்டணியாக வலம் வந்த இவர்கள் மீண்டும் ஒன்று சேர்வது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. அரண்மனை 4 படத்திற்கு பிறகு கலகலப்பு 3 படத்தை எடுப்பதாக இருந்தார் சுந்தர் சி. ஆனால் அரண்மனை 4 படத்தின் ரிசல்ட் அவரின் எண்ணத்தை மாற்றியிருக்கிறது. அடுத்த படத்தில் சுந்தர் சிதான் ஹீரோவாம். அதில்தான் வடிவேலு நடிப்பதாக தெரிகிறது.