மணிரத்னம் படத்தை மிஸ் பண்ண அஜித்... என்ன நடந்துச்சு?
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் அஜித், தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பகாலகட்டத்தில் மணிரத்னம் படத்தை மிஸ் பண்ணியிருக்கிறார் என்கிற ஆச்சர்யத் தகவல் தெரியுமா?
பாலக்காட்டைச் சேர்ந்த அஜித்தின் தந்தை மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். அவரது தாயார் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளும் பணியில் இருந்த அஜித்தின் தந்தை அவரது தாயைத் திருமணம் செய்துகொண்டார். அதேநேரம், அஜித்தின் சிறுவயது வாழ்வு முழுமையாக சென்னையிலேயே கழிந்தது. எழும்பூர் ஆசான் நினைவு பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.
அவரின் சகோதரர்கள் இரண்டுபேருமே படித்துமுடித்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட, இவர் மட்டுமே பெற்றோர்களுடன் சென்னையில் இருந்தார். அஜித்தின் தந்தை வேலைபார்த்த மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு பைக் ரேஸ் என்றால் கொள்ளை பிரியமாம். அப்படி, பைக் ரேஸ் அஜித்துக்கும் அறிமுகமாகியிருக்கிறது. ஆனால், சிறு வயது முதலே எப்படியாவது ஒரு நடிகனாகிவிட வேண்டும் என்பது அவரது தீராக் கனவாக இருந்திருக்கிறது. ஆனால், வீட்டிலே எப்படியாவது ஒரு வேலைக்குப் போக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் மெக்கானிக் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அஜித், ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். தொழிலைக் கற்றுக்கொண்டு என்றாவது ஒருநாள் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசையும் அவருக்கு இருந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் இரவுப் பணியை வாங்கிய அஜித், பகல் நேரங்களில் சினிமா வாய்ப்புகளைத் தேடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.
இதையும் படிங்க: இதனால் தான் மோகன் மார்கெட் போனது… அஜித்தின் லாஜிக்.. ஷாக் தகவல்
சினிமா கம்பெனிகளுக்கு நேரில் சென்று வாய்ப்புத் தேட வேண்டிய சூழல். இப்படியாகப் போய்க்கொண்டிருந்தபோது, சில விளம்பரப் பட வாய்ப்புகள் அஜித்துக்கு வருகின்றன. அதில், ஒரு விளம்பரப் படத்தை எடுத்தவர் மணிரத்னத்தின் நெருங்கிய நண்பரும் ஒளிப்பதிவாளருமான பி.சி.ஸ்ரீராம். அஜித்தின் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டிய அவர், தனது நண்பரான மணிரத்னத்திடமும் சிபாரிசு செய்திருக்கிறார்.
அப்படியாக ஒருநாள் அஜித்துக்கு மணிரத்னத்தின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்று நேரில் சென்றிருக்கிறார் அஜித். மணிரத்னம் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்றூ ஆசைப்பட்டிருக்கிறார். அவரின் அலுவலகத்துக்குச் சென்றபோது ஆடிஷனுக்காக நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.
ஆனால், நம்பிக்கையோடு முயற்சி செய்த அஜித், தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மணிரத்னம் படத்தில் நடிக்கப்போவதாகத் தனக்குத் தெரிந்தவர்களிடத்தில் எல்லாம் அஜித் பெருமையாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டிருக்கிறது. இது அஜித்துக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.