மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அமீர். பருத்திவீரனில் செம பிக் அப் ஆனார். யோகி படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இவர் தனது இளமைக்கால சினிமா ஆர்வம் எப்படி இருந்தது என சுவைபட சொல்கிறார் பாருங்கள்.
மதுரையில உள்ள ஒரே பொழுதுபோக்கு சினிமா தான். எனக்குத் தெரிஞ்சி 12 வயதுல இருந்து நான் சினிமாவின் காதலனா ஆயிட்டேன். எங்க அம்மா படம் பார்த்துட்டு வந்து அதை ரொம்ப விவரிச்சி சொல்வாங்க. அவங்க கையில படுத்துக்கிட்டே கேட்பேன். எங்க அம்மா படிக்கா விட்டாலும் கதாசிரியர் மாதிரி சொல்வாங்க.
அவங்க சொல்ற கதையை நான் காட்சியா எண்ணிப் பார்த்துக்கிட்டே இருப்பேன். அவங்க சொல்ற படத்தோட போஸ்டர் எனக்கு நினைவில இருக்கும். அந்தப் படத்தின் கதாநாயகன் யாருன்னு தெரியும். நான் அந்த டிரஸ் எப்படி எப்படி போட்ருப்பாரு, சண்டை போடுவாருன்னு காட்சியா நினைச்சிப் பார்ப்பேன். அங்கிருந்து தான் தொடக்கம்.
நான் அடிக்கடி நண்பர்கள்கிட்ட நான் திரையோடு பேசுவேன்னு சொல்வேன். ஸ்கிரீன் எங்கிட்ட பேசும். பலவிதமான உணர்வுகளை சொல்லித்தரும். பலவிதமா என்னை சிந்திக்க வைக்கும்னு சொல்லுவேன். அப்ப மொழி கடந்து படம் பார்ப்பேன். ஹாலிவுட், பாலிவுட், டப்பிங்னு ரசிச்சிப் பார்ப்பேன்.
14வயதுல தந்தை இறந்துட்டாரு. அந்த வயசுல எனக்கு சுதந்திரம் கிடைக்குற மாதிரி உணர்றேன். ஏன்னா அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அப்பாடான்னு பயப்படுவேன். ஏதாவது சொல்லி சொல்லி சினிமா பார்க்கப் போயிடுவேன். அடியே வாங்கிருக்கேன்.
ஒருமுறை வீட்ல உள்ளவங்க உறவுக்காரங்க ஒருத்தர்கிட்ட போய் ஒரு செய்தி சொல்லிட்டு வான்னு அனுப்புனாங்க. அப்ப செல்போன் இல்லாத காலம். நான் சைக்கிள எடுத்துக்கிட்டு ஜெய்ஹிந்த்புரம் நோக்கிப் போறேன். போற வழில தங்கம் தியேட்டர பார்க்குறேன். மிதுன் சக்கரவர்த்தி நடிச்ச இந்திப் படம் ஓடுது. படத்துக்குப் போயிட்டேன்.
நான் யாருக்கு செய்தி சொல்லணும்னு போனேனோ அந்த உறவுக்காரங்க வேற யார் மூலமாவோ செய்தியைக் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க. என்னடா பையன இன்னும் காணோமே… அப்பா வேற இல்ல.. எங்க போனான்னு வீட்ல தேட ஆரம்பிச்சிட்டாங்க. நான் படம் பார்த்துட்டுப் போறேன்.
எங்கடா போனே இவ்ளோ நேரமான்னு கேட்க, நான் எதை எதையோ சொல்லி சமாளிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் மூணு நாள் கழிச்சி வீட்டுக்கு விஷயம் தெரிய ஆரம்பிச்சது. என்னை அடி போட்டு பின்னிட்டாங்க. சரியான அடி… அதை மறக்கவே முடியாது என்னால… என்கிறார் அமீர்.