ஒரே டியூன்.... 6 பாடல்கள்... ரசனையோ ரசனை... இளையராஜாவை அடிச்சிக்க ஆளே இல்லையப்பா...!
இசைஞானி தமிழ்த்திரை உலகில் கொடுத்த பாடல்கள் எல்லாமே தேன்கிண்ணம் தான். அதைப் பருகப் பருக கொஞ்சம் கூட திகட்டாது.
80ஸ் குட்டீஸ்களைக் கவர்ந்த பாடல்கள் இன்றைய 2கே கிட்ஸ்களையும் கவர்கிறது என்றால் ஆச்சரியம் தான். எங்காவது காரில் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டால் நாம் முதலில் தேர்ந்தெடுப்பது இளையராஜா பாடல்களைத் தான். இதற்காக நாம் கடை கடையாக ஏறி இறங்கி பென் ட்ரைவ் முழுவதும் பாடல்களை சேமித்து எடுத்துச் செல்வோம். அந்த வகையில் இளையராஜா இன்றும் நம் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அவர் பல பாடல்களில் வித்தியாசம் காட்டி இருப்பார். 2கே கிட்ஸ்கள் காலகட்டத்தில் ஒரு பாடலை 1 முறை கேட்டாலே நமக்கு சிறிது நேரத்தில் போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால் ஒரே டியூனை வைத்து இளையராஜா 6 விதமான பாடல்களைக் கொடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். வாங்க பார்க்கலாம்.
40 வருடங்களுக்கு முன்பு அதாவது 1982ல் பாலுமகேந்திரா இயக்கிய மலையாளப் படம் ஓலங்கள். இந்தப் படத்திற்குப் பயன்படுத்திய டியூனைத் தான் அவர் தொடர்ந்து 5 பாடல்களுக்குப் பயன்படுத்தி உள்ளார். இந்தப் படத்தில் உள்ள 'தும்பி வா தும்புக்குடத்தின்' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
1982ல் விஜயகாந்த் நடித்த படம் ஆட்டோராஜா. இதில் 'சங்கத்தில் பாடாத கவிதை' என்ற பாடலுக்கும் இதே டியூன் தான். 1986ல் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான 'நிரீக்ஷனா' என்ற தெலுங்கு படம். இதில் பானுசந்தர் ஹீரோ. அர்ச்சனா தான் ஹீரோயின். இதில் வரும் 'ஆகாசம் ஈனதிதோ' பாடலும் இதே டியூன் தான்.
இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆனது. 'கண்ணே கலைமானே' படம். இந்தப் படத்தில் ஜானகி பாடிய ஒரு பாடல் அதே டியூன் தான். 1996ல் இந்தியில் பாலுமகேந்திரா இயக்கிய படம் 'ஆர் ஏக் பிரேம் கஹானி'. இந்தப்படத்திலும் அதே டியூன் தான். கொஞ்சம் நகாசு வேலைகள் செய்து இருப்பார். 2009ல் இந்தியில் வெளியான படம் 'பா'.
இந்தப் படத்தில் தந்தை, மகன் உறவு சம்பந்தமாக ஒரு பாடல். 'கம் சம் கம்' என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கும் அதே டியூன் தான். இப்படியே வெவ்வேறு மொழிகளில் இளையராஜா 6 பாடல்களில் ஒரே டியூனைப் பயன்படுத்தி சூப்பர்ஹிட் கொடுத்துள்ளாராம்.