விஜய் அரசியலுக்கு வர காரணம் தலைவா படமா? யார் சொன்னது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க..!
கடந்த ஆண்டு திடீரென விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கினார். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் பலரும் இதை விமர்சித்தார்கள். ஆனாலும் சிறிதும் சளைக்காமல் எடுத்துக் கொண்ட முயற்சியில் தீவிரமாக இருந்தார் விஜய். சினிமாவில் தான் இவரது பேச்சு எடுபடும்.
நிஜத்தில் மக்கள் மத்தியில் எடுபடாது என்றார்கள். சினிமா ரசிகர்களை எல்லாம் தொண்டர்களாக்க முடியாது என்றார்கள். ஆனால் நாளுக்கு நாள் விஜய் நகர்த்தும் அரசியல் பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்து வருகிறது. கட்சிக்கொடி அறிமுகத்தையே பெரிய மாநாடு என பிரம்மாண்டமாக நடத்தினார்.
விஜய் 250 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலில் முழுமூச்சாக இறங்குகிறார் என்றால் அது சாதாரண காரியமல்ல. அவர் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் தான் கடைசி படம். இந்தப் படத்திலேயே அரசியல் பற்றி நிறைய பேசுவார் என்று தெரிகிறது. இந்தப் படம் அவரது அரசியலுக்கு பெரிய பக்கபலமாக இருக்கும் என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வர என்ன காரணம் என்று பலருக்கும் சந்தேகம் உண்டு. தலைவா படத்தின்போது படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்தது. இதுதான் காரணம் என்று பலரும் சொன்னார்கள். அது உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு கருத்தை தனது யூடியூப் சேனலில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தலைவா படத்தின் வெளியீட்டுக்கு முன்னாலே ஒரு காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் தான் விஜய். அதற்கு முன்னாலேயே அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதுதான் இப்போது காயாகி கனியாகி பழுத்து நிற்கிறது என்கிறார் சித்ரா லட்சுமணன்.
ஒரு சிலர் அரசியலுக்கு வந்து அரியணையில் ஏறினால் இதை விட அதிகமாக சம்பாதிக்கலாம். அதனால்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்று எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதே நேரம் விஜய் வரும் இடங்கள் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதைக் காண முடிகிறது. விஜய் சினிமாவைப் போல அரசியலிலும் ஜெயிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.