அமரன் படத்தை எடுக்க வேண்டாம் என சொன்னேன்!. முகுந்தன் அம்மா பகீர் பேட்டி

By :  Murugan
Update: 2025-01-05 06:41 GMT

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம்தான் அமரன். இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாத கூட்டத்தின் தலைவனை பிடிக்க போகும்போது குண்டடி பட்டு இறந்து போன மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை.

முகுந்த் வரதராஜனின் குடும்ப பின்னணி, அவரின் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை, தீவிரவாதிகளை அழிக்க அவர் போட்ட திட்டங்கள், அதில் இழந்த அவரின் நண்பர்கள் என பல விஷயங்கள் இந்த படத்தில் காட்டப்பட்டிருந்தது. காஷ்மீரில் முகுந்த் உண்மையிலேயே களமாடிய பகுதிகளுக்கு சென்று படப்பிடிப்பை எடுத்தார்கள்.


படத்தின் முழு கதையையும் படித்துப்பார்த்த முகுந்தின் உயர் அதிகாரிகள் அதற்கான அனுமதியை கொடுத்தார்கள். அதோடு, சில காட்சிகள் நிஜமான ராணுவ வீரர்களும் நடித்திருந்தார்கள். இதுவரை சினிமா எடுக்கப்படாத இடங்களிலும் அமரன் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்திற்காக நிறைய புரமோஷனும் செய்யப்பட்டிருந்தது.

இந்த புரமோஷன்களில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபகா வர்கீஸும் கலந்து கொண்டார். தற்போது அவர் வெளிநாட்டில் மகளுடன் வசித்து வருகிறார். முகுந்த் வரதராஜன் இறந்தபின் அவரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி முகுந்தின் அப்பாவே சொல்லியும் அவர் கேட்கவில்லை. தற்போதுவரை முகுந்தின் நினைவாகவே அவர் வாழ்ந்து வருகிறார்.


அப்படி வெளியான அமரன் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போய் நல்ல வசூலை பெற்றது. 300 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது. இந்த படம் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு முக்கிய படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், முகுந்த் வரதராஜனின் தாயார் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கோவையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது ‘படத்தை பார்த்தால் என் மகனின் நினைவு என்னை வாட்டும் என்பதால் அவரை பற்றிய படம் எடுக்க வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னேன். ஆனால், ராஜ்குமார் பெரியசாமி என்ன சம்மதிக்க வைத்தார்’ என சொல்லி இருக்கிறார்.

Tags:    

Similar News