அந்த பையனுக்கு பயமே இல்ல!.. ஷாக் ஆயிட்டேன்!. ஜேசன் சஞ்சய் பற்றி பேசும் தமன்!..
Jason Sanjay: நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் சிறுவனாக வந்து நடனமாடுவார். அதன்பின் விஜயுடன் அவர் இருக்கும் சில புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும். ஜேசன் சஞ்சய் சென்னையில் படித்து வந்தது மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும்.
லண்டனில் படிப்பு: ஆனால், லண்டனுக்கு சென்று சினிமா இயக்கம் பற்றி அவர் படித்தார் என்பது பலருக்கும் தெரியாது. அதோடு, நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களையும் எடுக்க துவங்கினார். ஆனால், அதில் ஒன்று கூட யுடியூப்பில் வெளியாகவில்லை. ஒன்று மட்டும் வெளியானது. அது முழுமை பெறாத ஒரு வீடியோவாக இருந்தது. அதில் ஜேசன் சஞ்சயே நடித்திருந்தார்.
அதன்பின் சென்னை நீலாங்கரையில் விஜய் தனியாக வசிக்க அவரின் மனைவி, மகன், மகள் என எல்லோரும் லண்டனில் செட்டில் ஆனார்கள். இதுபற்றிய காரணம் இதுவரை வெளியே தெரியவில்லை. விஜய்க்கும் அவரின் குடும்பத்துக்கும் இடையே நல்ல உறவு இல்லை என சொன்னார்கள்.
இயக்குனர் அவதாரம்: அப்போதுதான் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராகிறார், அதுவும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை அவர் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. ஏனெனில், குட்டி விஜய் போல இருக்கும் ஜேசன் நடிகராக வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள்.
அதேநேரம் தனது மகன் ஜேசன் குறித்து விஜய் டிவிட்டரிலோ, சினிமா நிகழ்ச்சிகளிலோ எங்கும் பேசவில்லை. பட அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகப்போகிறது. எனவே, ஜேசன் இயக்கும் படம் டிராப் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், அதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
சந்தீப் கிஷன்: ஜேசன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் தமன் ‘நான் இன்னமும் அதிர்ச்சியில் இருக்கிறேன். பொதுவா ஹீரோவோட பசங்க சினிமாவில் நடிப்பாங்க, மியூசிக் டைரக்டரோட பசங்க மியூசிக் டைரக்டர் ஆவாங்க. ஜேசன் எப்படி இயக்குனர் ஆனார்னு ஆச்சர்யமா இருக்கு. அவருக்கு தைரியம் அதிகம்.
அவர் சொன்ன கதை கேட்டு ஷாக் ஆயிட்டேன். அந்த கதையை கேட்டா பெரிய நடிகர்களே நடிக்க சம்மதிப்பாங்க. ஆனா, ‘நான் சந்தீப் கிஷனை வச்சிதான் பண்ணுவேன். இந்த கதைக்கு அவர்தான் சரியா இருப்பார்னு’ ஜேசன் ஸ்டிராங்கா இருக்கார். அந்த பையனுக்கு தான் விஜயின் மகன் என எந்த பந்தாவும் இல்ல. அவருக்காகவே நான் சிறந்த இசையை கொடுக்கணும்னு ஆசைப்படுகிறேன்’ என சொல்லியிருக்கிறார்.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நடிக்க விரும்பினால் அவரை வைத்து படமெடுக்க பல இயக்குனர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவரோ அதில் ஆர்வமில்லாமல் இயக்குனராகிவிட்டார்.