இந்தியன் 3-க்கு டாட்டா காட்டிய லைக்கா!.. யாரு உள்ள வறாங்க தெரியுமா?!...
Indian3 : கோலிவுட்டில் பெரிய நடிகர்களுக்கு பல கோடிகள் சம்பளம் கொடுத்து அதிக பட்ஜெட்டுகளில் படமெடுக்கும் முக்கிய கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனமாக லைக்கா புரடெக்ஷன்ஸ் இருக்கிறது. லைக்கா தயாரித்த முதல் படமே விஜய் நடித்த கத்தி. அதன்பின் தொடர்ந்து பல படங்களை இந்நிறுவனம் தயாரித்தது.
ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த நிறுவனத்திற்கு போதாத காலம் போல. ஏனெனில் தொடர் தோல்விப்படங்களை கொடுத்து வருகிறது இந்நிறுவனம். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் லாபத்தை பார்த்த லைக்கா அதன்பின் லாபத்தையே பார்க்கவில்லை. ஏற்கனவே ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் ஓடவில்லை.
அதன்பின் கமலை வைத்து எடுத்த இந்தியன் 2, அஜித்தை வைத்து எடுத்த விடாமுயற்சி, ரஜினியை வைத்து எடுத்த வேட்டையன் மற்றும் லால் சலாம் போன்ற படங்கள் அந்த நிறுவனத்திற்கு எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை. லைக்கா நிறுவனம் சந்தித்த நிதிநெருக்கடி பிரச்சனையால்தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே பாதிக்கப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இந்த படம் ட்ரோலில் சிக்கி சின்ன பின்னமானது. ஷங்கர் அமைத்திருந்த திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. இந்தியன் 2 எடுக்கும்போதே, இந்தியன் 3-க்கான எல்லா காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். இன்னும் சில சின்ன வேலைகள் மற்றும் ஒரு பாடல் மட்டுமே பாக்கி இருந்தது.
ஷங்கரும் அதை முடித்து கொடுத்துவிடுகிறேன் என சொல்லிவிட்டார். ஆனால், கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கமல் நினைக்கிறார். அதோடு, இந்தியன் 3-க்கான சம்பளத்தை கமலும், ஷங்கரும் இன்னமும் வாங்கவில்லை. இந்தியன் 2 ஓடாததால் அவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்படும் என தெரியவில்லை. இப்படி பல இழுபறிகள் இந்தியன் 3-யில் இருக்கிறது.
இதில் கடுப்பான லைக்கா நிறுவனம் இந்த படமே வேண்டாம் என முடிவெடுத்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் படத்தை கைமாற்றி கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, கமலையும், ஷங்கரையும் அந்த நிறுவனமே டீல் செய்யும் என்கிறார்கள். கமல் இப்போது திமுக அரசிடம் நெருக்கம் காட்டி வருகிறார். அதோடு, சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினும் கமலை சந்தித்து பேசினார். எனவே, விரைவில் இந்தியன் 3 படத்திற்கான வேலை துவங்கலாம் என கணிக்கப்படுகிறது.