விஜயை நம்பி நோ யூஸ்!.. அந்த படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் சூப்பர் குட் மூவிஸ்!..
Actor vijay: கோலிவுட்டில் பல அறிமுக இயக்குனர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தது சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனம்தான். விக்ரமன், எழில், லிங்குசாமி உள்ளிட்ட பல இயக்குனர்களின் முதல் படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்தது. 90களில் உதவி இயக்குனர்கள் தங்களின் கதைகளை எடுத்துக்கொண்டு செல்வது இந்த நிறுவனத்திடம்தான்.
சூப்பர் ஹிட் பிலிம்ஸை நிறுவியது ஆர்.பி.சவுத்ரி. கதை பிடித்திருந்தால் புதுமுக இயக்குனராக இருந்தாலும் தைரியமாக படமெடுப்பார். பல புதிய நடிகர், நடிகைகளை அறிமுகமும் செய்திருக்கிறார். நடிகர் விஜய் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்தார். அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
எனவே மற்ற தயாரிப்பாளர்கள் விஜயை வைத்து படமெடுக்க ஆர்வம் காட்டவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகர் பல தயாரிப்பாளர்களை போய் கேட்டும் யாரும் விஜயை வைத்து படம் தயாரிக்க முன்வரவில்லை. ஆனால், தேவா படத்தை பார்த்துவிட்டு விஜய் மீது இயக்குனர் விக்ரமனுக்கு நம்பிக்கை வந்தது. அவர் எழுதிய கதைக்கு விஜய் செட் ஆவர் என தோன்றியது. இதை அவர் ஆர்.பி.சவுத்ரியிடம் சொன்னபோது அவர் ஏற்கவில்லை.
‘பிரசாந்தை வைத்து எடு’ என சொன்னார். ஆனால், விக்ரமனோ ‘விஜய் சரியாக இருப்பார்’ என சொல்லி அவரை நடிக்க வைத்தார். அப்படி உருவான பூவே உனக்காக படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றிதான் விஜயை வைத்து படமெடுக்கலாம் என்கிற நம்பிக்கையை மற்ற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் கொடுத்தது. விஜயின் கெரியரில் முக்கிய படமாக பூவே உனக்காக அமைந்தது.
அதன்பின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா போன்ற படங்களில் விஜய் நடித்தார். இதில் ஜில்லா மட்டுமே ஆர்.பி.சவுத்ரிக்கு நஷ்டத்தை கொடுத்தது. விரைவில் சூப்பர் குட் மூவில் நிறுவனம் 100வது படத்தை நெருங்கவுள்ளது. தனது நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆர்.பி.சவுத்ரி ஆசைப்பட்டார். விஜயிடம் சில முறை பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், விஜய் பிடிகொடுக்கவில்லை.
தற்போது விஜய் அரசியலுக்கும் போய்விட்டதால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா என தெரியவில்லை. எனவே, இனிமேல் விஜயை நம்பி பலனில்லை என்பதை புரிந்துகொண்ட ஆர்.பி.சவுத்ரி விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயாணி நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சூர்ய வம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். இந்த படத்தில் சரத்குமாரும், சவுத்ரியின் மகனும் நடிகருமான ஜீவாவும் நடிக்கவுள்ளனர். மேலும், இந்த படத்தை விக்ரமன் இயக்கவில்லை. இயக்குனர் பிரபுசாலமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஒருவர் இயக்கவுள்ளாராம்.