Actor suriya: ஜெய் பீம் படத்தில் நான் செய்தது பெரிய தவறு!.. 3 வருடங்கள் கழித்து சொன்ன சூர்யா..
Actor suriya: நடிகர் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய் பீம். 2021ம் வருடம் நவம்பர் மாதம் இப்படம் ஓடிடியில் வெளியானது. அப்படத்திற்கு முன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான சூரரைப்போற்று படமும் ஓடிடியில் வெளியானது. ஏனெனில் அந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது.
எனவே, ஜெய் பீம் படத்தை ஓடிடியில் வெளியிட்டார் சூர்யா. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இனிமேல் சூர்யாவின் படங்களை தியேட்டரில் திரையிட மாட்டோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், ஜெய்பீம் படம் ஓடிடியில் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக பணியாற்றியபோது 20 வருடங்கள் நடத்திய ஒரு வழக்கை சினிமாவாக உருவாக்கியிருந்தார் தா.ச.ஞானவேல். அடிப்படையில் அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் தகவல்களை சேகரித்து அப்படத்தை சிறப்பாக இயக்கியிருந்தார்.
இருளர் இனத்தை சேர்ந்த சிலரை திருட்டு புகாரில் பொய் வழக்கு போட்டு போலீசார் சித்ரவதை செய்த உண்மை சம்பவம் ஜெய் பீம் படம் மூலம் மக்களுக்கு தெரிய வந்தது. இந்த படம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோடு, இப்படத்தை பார்த்த முதல்வர் முக ஸ்டாலின் இருளர் இனத்திற்காக சில சலுகைகளையும் அறிவித்தார்.
அதேநேரம், இந்த படம் அடித்தட்டு மக்களை சென்று சேரவில்லை. அதற்கு காரணம் இப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை என்பதால்தான். தற்போது சூர்யாவின் கங்குவா படம் உருவாகி வருகிற 14ம் தேதி உலகமெங்கும் பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த படம் தொடர்பான புரமோஷனில் சூர்யா பல தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.
ஜெய்பீம் படம் பற்றி பேசிய அவர் ‘சிவா இயக்கிய அண்ணாத்த படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது ஜெய்பீம் படத்துக்கான டிக்கெட் பற்றி முதியவர் ஒருவர் விசாரித்து கொண்டிருந்தார். அவரிடம் ‘ஜெய் பீம் படம் தியேட்டரில் இல்லை. ஓடிடியில் வெளியாகியிருக்கிறது’ என சொன்னேன். நான் சொன்னது அவருக்கு புரியவில்லை.
அப்போதுதான் ஜெய் பீம் படத்தை ஓடிடியில் வெளியிட்டது தவறான முடிவு என எனக்கு தோன்றியது. காத்திருந்து அப்படத்தை நான் தியேட்டரில் வெளியிட்டிருக்க வேண்டும்’ என கூறினார் சூர்யா.