மீட்டிங்க விட்டு ஷூட்டிங் போன விஜய்!. நல்லா இருக்கு உங்க அரசியலு!.. பிரமாதம்!..
Actor vijay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார் விஜய். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவில் நுழைந்து நடனத்திறமை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். குறிப்பாக காதல் கதைகளில் நடித்து நிறைய பெண் ரசிகைகளையும் பெற்றார். ரஜினிக்கு பின் இவருக்கு அதிக ரசிகர்களும் உண்டானார்கள்.
அரசியல் ஆசை: ஒருகட்டத்தில் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறி ரஜினிக்கே டஃப் கொடுத்தார். இப்போது 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறிவிட்டார். ஆனால், அரசியல்வாதிகள் மூலம் தான் சந்தித்த பிரச்சனைகளால் கோபமடைந்த விஜய் இவர்களுக்கு எதிராக நாமும் அரசியலுக்கு வர வேண்டும் என முடிவெடுத்தார்.
எனவே, விஜயின் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. கடந்த சில வருடங்களாக தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் அரசியலுக்கு வருவது பற்றியும், கள நிலவரம் பற்றியும் விஜய் தொடர்ந்து ஆலோசித்து வந்தார். இறுதியில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி கட்சி மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார்.
தமிழக வெற்றிக் கழகம்: இந்த மாநாட்டில் 8 லட்சம் பேரை வரை கலந்துகொண்டது முக்கிய அரசியல் கட்சியினருக்கே ஆச்சர்யத்தை கொடுத்தது. இந்த மாநாட்டில் திமுகவுக்கு எதிராக மிகவும் ஆவேசமாக பேசினார். அவரின் பேச்சை கேட்டு அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே ஆச்சர்யப்பட்டார். விஜய் இப்படி பேசுவார் என நானே எதிர்பார்க்கவில்லை என சொல்லியிருந்தார்.
ஆனால், விஜய்க்கு அரசியல் செட் ஆகாது. ஏதோ கோபத்தில், வேகத்தில் வந்துவிட்டார். அவரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. இங்கே பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கிறார்கள். விஜயின் கட்சியை வளரவிடமாட்டார்கள், ஒருபக்கம், விஜய்க்கே அரசியல் செட் ஆகாது என பலரும் சொன்னார்கள். அதற்கு காரணம் விஜய் மிகவும் தனிமை விரும்பி.. யாருடனும் அதிகம் பேச மாட்டார்.. நாட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதுபற்றி கருத்து சொல்ல மாட்டார்.. அரசியல் கட்சி துவங்கி பின்னரும் கூட இப்போது வரை ஒரு செய்தியாளர் சந்திப்பையும் விஜய் நடத்தவில்லை.
ட்ரோலில் சிக்கிய விஜய்: சில மாதங்களுக்கு முன்பு மழையால் மக்கள் பாதிக்கப்பட்ட போது நேரில் சென்று மக்களை பார்க்காமல் அதில் பாதிக்கப்பட்ட சிலரை தனது பனையூர் அலுவலகத்திற்கு வரவைத்து நிவாரண பொருட்களை கொடுத்தார் விஜய். இதை பலரும் ட்ரோல் செய்தார்கள். வீட்டிலிருந்து வேலை என சொல்வது போல விஜய் வீட்டிலிருந்தே அரசியல் செய்கிறார் என பலரும் கிண்டலடித்தார்கள். நான் அங்கு போனால் கூட்டம் கூடும் என சொல்லி சப்பை கட்டு கட்டினார் விஜய். ஆனால், கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்கு திரிஷாவுடன் கோவாவுக்கு போனார்.
இந்நிலையில்தான், தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாகவும், இதில் விஜய் பல முக்கிய முடிகளை எடுக்கப்போகிறார் எனவும், இந்த கூட்டம் முடிந்த பின் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார் எனவும் சொல்லி நேற்று ஹைப் ஏற்றினார்கள்.
ஆனால், நடந்ததே வேறு. இன்று நடைபெற்ற அந்த கூட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படப்பிடிப்புக்கு போய்விட்டார். எனவே, தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது விஜய் மீண்டும் சினிமாவுக்கே போய்விடுவார் என்று பலரும் சொல்கிறார்கள்.