ரஜினிக்கும் கமலுக்கும் பாலச்சந்தர் கொடுத்த தண்டனை!.. சிங்கப்பூரில் நடந்த சம்பவம்!...
Rajini Kamal: ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தில் கமல் ஹீரோ. அதாவது ரஜினி அறிமுக நடிகராக சினிமாவில் நுழைந்த போது கமல் ஒரு ஸ்டாராக இருந்தார். பொதுவாக ஒரு ஸ்டார் நடிகர் ஒரு அறிமுக நடிகரை தன்னுடைய படங்களில் முக்கிய வேடத்தில் நடிக்க அனுமதிக்கமாட்டார். ஆனால், அது பாலச்சந்தர் என்பதால் கமலால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏனெனில், பாலச்சந்தர் அவரின் குருவாக இருந்தார்.
வில்லனாக கலக்கிய ரஜினி: தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய படங்களில் கமலோடு ரஜினி இணைந்து நடித்தார். பெரும்பாலும் ரஜினிக்கு நெகட்டிவ் வேடம்தான். நெகட்டிவ் வேடத்தை அசத்தலாக செய்து பிரபலமானார் ரஜினி. ரஜினியும், கமலும் நல்ல நண்பர்களாகவே மாறினார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் கமலும், ரஜினியும் பேசி ‘இனிமேல் தனியாக நடிப்போம்’ என முடிவெடுத்தார்கள்.
ரஜினி அவரது ஸ்டைலில் ஆக்ஷன் படங்களில் நடிக்க, கமல் வித்தியாசமான கெட்டப் மற்றும் கதைகளில் நடிக்க துவங்கினார். இருவரும் நண்பர்கள்தான் என்றாலும் இருவருக்கும் இடையே தொழில்போட்டி இருந்து கொண்டேதான் இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது.
ஈகோ இல்லாத ரஜினி: எந்த மேடையாக இருந்தாலும் கமலை உயர்த்தியும், தன்னை தாழ்த்தியுமே பேசுவார் ரஜினி. அப்போது அவரிடம் எந்த ஈகோவும் இருக்காது. ரஜினி அப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ரஜினி அப்படித்தான் இருக்கிறார். இது கமலுக்கும் தெரியும். கமலின் படங்களுக்கும் ரஜினி ரசிகன்தான். கமலின் ஹேராம் படத்தை 40 முறைக்கும் மேல் பார்த்திருக்கிறார் ரஜினி.
நினைத்தாலே இனிக்கும்: பேட்டி மற்றும் சினிமா விழாக்களின் போது ரஜினியும் சரி.. கமலும் சரி.. இருவரும் வளரும் நேரங்களில் நடந்த பல சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஊடகம் ஒன்றில் பேசிய கமல் ‘நினைத்தாலே இனிக்கும் படம் உருவானபோது சிங்கப்பூரில் பல நாட்கள் தங்கியிருந்தோம். அங்கேயும் காலை 7 மணிக்கு முதல் ஷாட் வைப்பார் பாலச்சந்தர். நானும் ரஜினியும் நைட்டு சிங்கப்பூரில் சுத்திக்கிட்டு இருப்போம். எனவே, காலை 7 மணிக்கு செல்வது கஷ்டமாக இருக்கும்.
தூக்கமில்லாமல் தவித்த ரஜினி கமல்: ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்த போது நாளைக்கு இந்த சீன்தான் எடுக்கப்போகிறோம் என பாலச்சந்தர் முன்னால் அமர்ந்துகொண்டு சொல்லிக்கொண்டே வந்தார். பின்னால் அமர்ந்திருந்த நானும், ரஜினியும் தூங்கிவிட்டோம். திருப்பி பார்த்து கடுப்பான பாலச்சந்தர் ‘காரை விட்டு இறங்குங்கடா.. இன்னைக்கு நைட்டு ஃபுல்லா நீங்க ரெண்டும் தூங்கக் கூடாது’ என சொல்லிவிட்டார்.
ஷூட்டிங் நடக்கும் இடங்களில் எதாவது மரம் கிடைக்கிறதா என நானும் ரஜினியும் தேடுவோம். ஆனால், அப்படி மரமே இல்லாத இடத்தில் ஷூட்டிங் நடக்கும். எதாவது புதருக்கு பின்னால் என் முதுகில் ரஜினியும், அவர் முதுகில் நானும் சாய்ந்தவாறு அமர்ந்து தூங்கியிருக்கிறோம்’ என சொல்லியிருக்கிறார்.