20 வருட சம்பளத்தை சத்யராஜுக்கு மொய் எழுதிய நபர்!.. ஒரு செம பிளாஷ்பேக்!...
கோவையை சேர்ந்தவர் சத்யராஜ். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடி அலைந்தவர் இவர். பொதுவாக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடும் நடிகர்கள் என்றாலே ஊரில் கஷ்டப்பட்ட குடும்பம், சினிமாவுக்காக சென்னை வந்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தார் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனால், சத்யராஜுக்கு இது பொருந்தாது. ஏனெனில், அடிப்படையில் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சத்யராஜ். எனவே, அவருக்கு பணம் என்பது பிரச்சனையாக இருந்தது இல்லை. சென்னையில் தங்கி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய போதும் அவரிடம் ஒரு பைக் இருந்தது. அதில்தான் சென்று வாய்ப்பு கேட்டார்.
அவரின் உயரத்திற்கு வில்லனின் அடியாட்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பே வந்தது. சரி கிடைத்ததில் நடிப்போம் என அவரும் நடித்தார். பல படங்களில் வெறும் ‘யெஸ் பாஸ்’ என்கிற வசனம் மட்டும்தான் அவருக்கு கிடைத்தது. ஒரு கட்டத்தில் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கும் புரமோஷன் வந்தது. அதன்பின் மணிவண்னனின் இயக்கத்தில் அவர் நடித்த நூறாவது நாள் படம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது.
வில்லனாக நடித்து கொண்டிருந்தவரை தனது கடலோர கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக மாற்றினார் பாரதிராஜா. ஆனாலும், ஒருபக்கம் வில்லனாகவும் நடித்தார் சத்யராஜ். ஆனால், ஒருகட்டத்தில் இனிமேல் ஹீரோ மட்டுமே என முடிவெடுத்து பல படங்களிலும் ஹீரோவாக நடித்தார். இப்போது வயது காரணமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சத்யராஜ் கோவையை சேர்ந்த மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ஒருவர் தான் 20 வருடங்களாக சேர்த்து வைத்த சம்பள பணத்தை மொய்யாக எழுதினார் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், உண்மையில் அது நடந்த ஒன்று. இதை சூர்யாவின் அப்பா நடிகர் சிவக்குமாரே சொல்லியிருக்கிறார்.
ஜமீன்தார் மகனான சத்யராஜ் மகாராஷ்டிராவில் கவர்னராக இருந்த சுப்பிரமணியம் என்பவரின் மகளை திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் சிறுவயதிலிருந்தே சத்யராஜுக்கு கேர் கேட்டராக வேலை பார்த்த கருப்பையா என்பவர் 20 வருடங்களாக சத்யராஜ் வீட்டில் வாங்கிய சம்பளத்தை சத்யராஜ் திருமணத்தின் போது அதை அப்படியே மொய்யாக எழுதினார். பணக்காரர்கள் கொடுத்த பல பரிசு பொருட்களை விட இதுதான் என் மனதில் நிற்கிறது என சொல்லியிருக்கிறார் சிவக்குமார்.