இதக்கேட்டு நீங்க அழலனா மியூசிக் பண்றதயே நிறுத்திடுறேன்!. சவால் விட்ட இளையராஜா...
Ilayaraja: இளையராஜாவை திரைப்பட இசையமைப்பாளர் என்கிற வட்டத்திற்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரின் இசை கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனக்காயங்களுக்கு மருந்து போடுகிறது. பயணங்களின் போது ராஜாவின் இசையே வழித்துணையாக வருகிறது.
அதனால்தான் எப்போதோ அவர் போட்ட பாடல்களை நேரிடையாக கேட்க அவரின் இசைக்கச்சேரிகளுக்கு இப்போதும் கூட்டம் கூடுகிறது. அவரின் இசைக்கச்சேரிகளில் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டே அவரின் இசையை பலரும் கேட்டு ரசிக்கிறார்கள் என்றால் அதுதான் இளையராஜாவின் இசை மக்களிடம் ஏற்படுத்திய பாதிப்பு.
சினிமா பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு உயிர்ப்பு ஊட்டினார் ராஜா. விடுதலை, விடுதலை 2 போன்ற படங்களிலும் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைக்கிறார். 83 வயதிலும் சினிமாவில் பாடல்கள், பின்னணி இசை, இசை நிகழ்ச்சி, வெளிநாட்டில் சிம்பொனி என கலக்கி வருகிறார்.
சமீபத்தில் அவர் பல ஊடகங்களுக்கும் அவர் கொடுத்த பேட்டி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதில், ‘என்னை திமிர் பிடித்தவன், கர்வம் பிடித்தவன் என்று பேசுகிறார்கள். எனக்குதான் திமிர் அதிகம் இருக்கணும், எனக்குதான் கர்வம் அதிகம் இருக்கணும். ஏன்னா, எவனும் செய்யாததை நான் செய்து காட்டியிருக்கிறேன். ஆனால், என்னிடம் திமிர் இல்லை. என்னை சொல்லுபவனுக்குதான் திமிரும், கர்வமும் இருக்கிறது’ என சொல்லியிருந்தார்.
இந்நிலையில், சுசீந்தரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை படம் உருவானபோது அந்த படம் தொடர்பான விழாவில் பேசிய இளையராஜா ‘எனக்கு சுசீந்தரனை தெரியாது. ஆனால், அவர் இந்த படத்தின் கதையை சொன்னபோது ‘உலகத்தரத்தில் இருக்கிறது’ என சொல்லி மனதார அவரை பாராட்டினேன். இந்த படத்தின் டைட்டிலுக்கான பின்னணி இசையை இப்போதுதான் அமைத்தேன். அதில் நீங்கள் அழகர்சாமியின் இசையை கேட்க முடியாது. எல்லோருக்கும் ஒரு கற்பனை இருக்கும்.
அழகர்சாமியின் குதிரை என்றதும் ‘ஓ கிராமத்து படம்.. அதனால இளையராஜா இசை’ என நினைத்தால் அது தவறு. இது இதுவல்ல. இந்த படத்தின் டைட்டில் மியூசிக்கை கேட்கும்போது, 10 நிமிடம் மவுனமாக இருந்துவிட்டு, செல்போனை ஆஃப் செய்துவிட்டு, உங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு, மனதை அமைதியாக வைத்து இந்த இசையை கேளுங்கள். உங்கள் கண்ணில் கண்ணீர் வரவில்லை என்றால் நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்’ என பேசியிருந்தார். இந்த வீடியோவை சிலர் இப்போது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.