சாப்பாட்டுக்கு காசில்லாம நடந்து போனேன்!.. பிளாஷ்பேக் சொல்லும் இளையராஜா!...

By :  MURUGAN
Published On 2025-05-30 22:00 IST   |   Updated On 2025-05-30 22:01:00 IST

Ilayaraja: இளையராஜா இப்போது பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கலாம். ஆனால், அப்படியே 60 வருடங்களுக்கு பின்னால் போனால் அவர் சாப்பாட்டுகே கஷ்டப்பட்டவர் என்பது பலருக்கும் தெரியாது. சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சொந்த ஊரை விட்டு சென்னை வந்தவர்தான் இளையராஜா.

அவர்களுக்கு முன்பே நடிகராகும் ஆசையில் சென்னை வந்தவர் பாரதிராஜா. அவர் வடபழனியில் பகுதியில் உள்ள ராம் தியேட்டருக்கு அருகில் வீடு எடுத்து தங்கியிருந்தார். சென்னை போனால் பாரதிராஜா தங்கியுள்ள அறையில் நாமும் தங்கிகொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் இளையராஜா, அவரின் சகோதரர் அமரன், அண்ணன் பாஸ்கர் ஆகிய மூவரும் சென்னை வந்தார்கள்.


சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சில நாடக நடிகர்களை வைத்து நாடகம் போட்டுக்கொண்டிருந்தார் பாரதிராஜா. சென்னை வந்த பின் இளையராஜா பிரதர்ஸ் செலவுக்காக நாடகங்களுக்கு இசையமைக்க துவங்கினார்கள். பாரதிராஜா போட்ட நாடகங்களுக்கு மட்டுமல்ல. பலரின் நாடகங்களுக்கும் இசையமைத்தார்கள். இயக்குனர் ஷங்கர் காமெடி நடிகராக நடித்த நாடகங்களுக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

எல்லா நேரமும் அதற்கு சம்பளம் கிடைக்கும் என சொல்ல முடியாது. சில சமயம் வெறும் கையோடும் திரும்ப வேண்டியிருக்கும். இதுபற்றி இளையராஜாவே சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் கூறியபோது ‘ஒருமுறை தி.நகரில் இருந்த ராமராவ் திருமண மண்டபத்தில் நடந்த ஒரு நாடகத்திற்கு இசையமைக்க போனோம். நாடகம் முடிந்துவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். யாரும் பணம் கொடுக்கவில்லை.


அங்கிருந்து டாக்ஸில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு செல்லக்கூட பணம் இல்லை. கையில் 50 பைசா இருந்தது. எனவே, கீபோர்டு, தபேலா போன்ற இசைக்கருவிகளை ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏற்றி அனுப்பிவிட்டு நாங்கள் மூவரும் நடந்தே போனோம்.

இரவு 10.45 மணி இருக்கும். டிரஸ்ட்புரம் ரவுண்டானா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து நந்தகுமார் என்கிற நண்பர் ஒருவர் எங்களை பார்த்துவிட்டு கீழே இறங்கிவிட்டார். நடந்ததை கேட்டுவிட்டு ‘நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?’ எனக்கேட்டார். இல்லை என சொன்னதும் அருகில் இருந்த ஹாலிவுட் ஹோட்டலுக்கு அழைத்து சென்று டிபன் வாங்கி கொடுத்தார். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அறையில் பசியோடு இருந்த பாரதிராஜாவுக்கும் டிபன் வாங்கிக்கொண்டு போனோம். ஒருவேளை சாப்பாடு போட்டவரை கூட நான் மறந்தது இல்லை’ என சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News