மியூசிக் டைரக்டர் ஆகணும்னு நினைச்ச அந்த மொமெண்ட்!. இளையராஜா சொன்ன பிளாஷ்பேக்!..
Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கியவர்தான் இளையராஜா. அதற்கு முன் ஜி.கே வெங்கடேஷ் உள்ளிட்ட சிலரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இளையராஜாவுக்கு சிறு வயது முதலே இசையின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அவரின் சகோதரர் பாஸ்கர் மற்றும் கங்கை அமரனுடன் இணைந்து கம்யூனிச கட்சியின் மீட்டிங்கில் இசை கச்சேரிகளில் வாசித்து வந்தார்.
இசை கச்சேரி: இளையராஜாவின் இசைப்பயணம் துவங்கியது அங்குதான். அதன்பின் சென்னை வந்து பாரதிராஜாவுடன் தங்கினார். கர்நாடக சங்கீதம், சமஸ்கிருதம், சினிமாவுக்கான இசை (கிளாசிக்), வெஸ்டர்ன் என எல்லாவற்றையும் ஒவ்வொரு மாஸ்டரிம் கற்றுக்கொண்டார். அதேபோல், கிடார், வயலின் போன்ற இசைக்கருவிகளையும் முறையாக கற்றுக்கொண்டார்.
அதன்பின்னர்தான் அப்போது பல படங்களுக்கும் இசையமைத்து வந்த ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்ந்தார். சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்தபோது ‘இசையமைப்பாளாரக வேண்டும் என்கிற முடிவை எப்போது எடுத்தீர்கள்?’ என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு இசைஞானி சொன்ன பதில் இதுதான்:
சினிமா இசை: நான் என் அண்ணன் பாஸ்கருடன் இசைக்கச்சேரிகளில் இசையமைத்துகொண்டிருந்த போது இடையிடையே எம்.எஸ்.வியின் சினிமா டியூன்களையும் வாசிப்பேன். அது என் அண்ணனுக்கு பிடிக்காது. ஆனால், கீழே இருக்கும் ரசிகர்கள் கைத்தட்டுவார்கள். எனவே, அதை தொடர்ந்து செய்து வந்தேன். கைத்தட்டல் கேட்டுக்கொண்டே போனது. எனக்குதான் கை தட்டுகிறார்கள் என்கிற கர்வம் வந்துவிட்டது.
இசையமைப்பாளர் ஆசை: ஒருநாள் யோசித்தேன். ‘இவர்கள் கைதட்டுவது எனக்கா? இல்லை அந்த இசைக்கா?’ என யோசித்தேன். அவர்கள் கைகளை தட்டுவது அந்த இசைக்காகத்தான். அதை உருவாக்கியது அந்த இசையை உருவாக்கிய இசையமைப்பாளர். எனவே, கைத்தட்டல் அவருக்குதான் போகிறது என்பது எனக்கு தெளிவாக புரிந்தது. அப்போது என் கர்வம் என்னைவிட்டு போனது.
‘சரி நாம் எப்போது இப்படி கைத்தட்டல் வாங்குவது?’ என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. நாம் இசையமைப்பாளர் ஆனால்தான் நமக்கும் கைத்தட்டல் கிடைக்கும் என முடிவெடுத்தேன். அதுதான், இசையமைப்பாளராக வேண்டும் என்கிற எண்ணத்தை எனக்குள் விதைத்தது’ என பதில் சொல்லியிருக்கிறார்.