கேப்டன் விஜயகாந்த் கல்யாணத்துக்கு அப்புறம் எடுத்த முதல் போட்டோ... அசத்தல் ஜோடிதான்!

By :  Sankaran
Update: 2025-01-31 08:30 GMT

தமிழ்சினிமா உலகில் கருப்பு எம்ஜிஆர், புரட்சிக்கலைஞர் என்று வர்ணிக்கப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். இவருடைய படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட்தான். தயாரிப்பாளர்களின் நடிகர் என்றால் அது இவர்தான். எந்தவிதமான வீண்செலவையும் அவர்களுக்கு ஏற்படுத்த மாட்டார். அதே நேரம் அவருடைய படங்கள் நஷ்டம் என்றாலும் தன்னோட பணத்தில் இருந்து அவர்களுக்கு செட்டில்மெண்ட் செய்து விடுவார். அல்லது இன்னொரு படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்து விடுவார்.


ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்த போதும் வைராக்கியத்துடன் கஷ்டப்பட்டு உழைத்து தமிழ்த்திரை உலகில் படிப்படியாக முன்னுக்கு வந்தவர்தான் கேப்டன் விஜயகாந்த். அவர் நடித்த படங்களின் படப்பிடிப்புகளில் கூட ஒரே மாதிரியாக அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்ற பாணியைக் கடைபிடித்தார்.

அதே போல அவரை யாராவது அலுவலகத்தில் வந்து பார்க்க வந்தாலும் அவர்களிடம் விஜயகாந்த் கேட்கும் முதல் கேள்வி சாப்பிட்டீங்களா... சாப்பிட்டு விட்டு வாங்கன்னு சொல்லி அவர்களது பசியைப் போக்குவாராம். அந்த வகையில் எப்போதும் அவரது அலுவலகத்தில் விஜயகாந்தைப் பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் உணவு தயாரித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம்.

அதுமட்டும் அல்லாமல் தன்னிடம் வந்து யாராவது உதவி என்று கேட்டால் மறுக்காமல் செய்து கொடுப்பாராம். பல நாடக நடிகர்களும், நலிந்த சினிமா நடிகர்களும் இப்படி பயன் அடைந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் படங்கள் என்றால் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் விரும்பிப் பார்ப்பார்கள்.

வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, செந்தூரப்பூவே, பூந்தோட்ட காவல்காரன், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப்போல என இவர் நடித்த பல படங்கள் இப்போது பார்த்தாலும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

தீவிர ரசிகை: அந்தளவு அற்புதமான நடிப்பை மிகைப்படுத்தாமல் நடித்து அசர வைத்திருப்பார். சினிமா வாழ்விலும் சரி. அரசியலிலும் சரி. பெரும் புரட்சி செய்தவர் என்றால் அது விஜயகாந்த் தான். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி பிரேமலதா. இவர் வேறு யாருமல்ல. அவரது தீவிர ரசிகை தான்.


திருமணம்: விஜயகாந்த் தனது 37வது வயதில்தான் இவரைத் திருமணம் செய்தார். அதற்குக் காரணம் இவரது நிஜ வாழ்க்கையிலும் வானத்தைப் போல மாதிரியான கதை நடந்துள்ளது. இவரது எல்லா தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்ததால் தான் இவ்வளவு தாமதமான திருமணமாம்.

அந்தவகையில் இவர்களது திருமணம் 1990ல் ஜனவரி 31ம் நாள் இனிதே நடைபெற்றது. அந்த இனிய நாள்தான் இன்று. அவர்கள் திருமணத்திற்கு பிறகு எடுத்த முதல் புகைப்படம்தான் நீங்கள் மேலே பார்ப்பது. அப்பவே கருப்பா இருந்தாலும் கேப்டன் எவ்வளவு களையா இருக்காருன்னு பாருங்க. இத்தம்பதியினருக்கு சண்முகப்பாண்டியன், விஜயபிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர். விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரது நினைவுகள் நம்மை விட்டு என்றும் மறையாது.

Tags:    

Similar News