முடியெல்லாம் நரைச்சி போச்சி!.. இன்னுமா வாய்ப்பு தேடுற?!.. விஜய் சேதுபதி சந்தித்த அவமானம்!..
சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. அதுவும் எடுத்தவுடன் ஹீரோ வாய்ப்பு கிடைத்துவிடாது. பல வருடங்கள் ஒரு இயக்குனரின் பின்னால் அலைய வேண்டும். அந்த இயக்குனருக்கு அவர் மீது நம்பிக்கை வரவேண்டும். துவக்கத்தில் சின்ன சின்ன வேஷங்கள் கூட கிடைக்கும். அதில் நடிக்க வேண்டும்.
ஒருநாள் சரியான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு கிடைக்காமலே கூட போய்விடும். சினிமா யாரை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என சொல்லவே முடியாது. அப்படி சினிமாவில் அபார வளர்ச்சி பெற்றவர்தான் விஜய் சேதுபதி. துவக்கத்தில் கூட்டத்தில் ஒருவராக கூட சில படங்களில் நடித்திருக்கிறார். புதுப்பேட்டை படத்தில் கூட தனுஷின் நண்பர்களில் ஒருவராக ஒரு காட்சியில் வருவார்.
அதன்பின் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த 2 படங்களும் ஹிட் என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. வழக்கமான ஹீரோக்கள் தேர்ந்தெடுப்பது போல ஹீரோயிசம் உள்ள கதைகளில் நடித்திருந்தால் விஜய் சேதுபதி காணாமல் போயிருப்பார். ஆனால், அதை அவர் செய்யவில்லை.
சூது கவ்வும் போன்ற கதைகளில் நடித்தார். அதுதான் ரசிகர்களுக்கு அவரை பிடிக்க வைத்தது. கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்தார். சின்ன வேடம், வில்லன், ஹீரோ என கதை பிடித்திருந்தால் எல்லாவற்றிலும் நடித்தார். விக்ரம் படத்தில் மிரட்டும் வில்லனாகவும் நடித்திருந்தார்.
ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கே வில்லனாக நடித்தார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி ‘ 25 வயதிலேயே எனக்கு தாடி நரைத்துவிட்டது. என்னடா முடியெல்லாம் நரைச்சி போச்சி. இன்னுமா சினிமாவுல வாய்பு தேடுற?’ என என் தங்கை என்னிடம் கேட்டார்.
ஒருமுறை பாலச்சந்தர் என்னை பார்த்துவிட்டு ‘உன் கண்கள் நன்றாக இருக்கிறது’ என சொல்லி புகைப்படம் எடுத்தார். அதில் ஒன்றை அவர் வைத்துக்கொண்டு ஒரு காப்பி எனக்கு கொடுத்தார். இதை என் தங்கையிடம் சொல்லி ‘அவர் ஒரு லெஜண்ட். என்னிடம் அவருக்கு ஏதோ ஒன்று பிடித்திருக்கிறது. அதை வைத்து சினிமாவில் பிழைத்துக் கொள்வேன்’ என சொன்னேன்’ என விஜய் சேதுபதி கூறியிருந்தார்.