இசைஞானியின் சந்தேகத்துக்கு அழகிய விளக்கம் கொடுத்த பாலுமகேந்திரா!.. எழுந்து கைத்தட்டிய இளையராஜா!..

1980ல் வெளியான படம் மூடுபனி. கதை, திரைக்கதை எழுதி இயக்கியவர் பாலுமகேந்திரா. படத்திற்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. பாடல்கள் எல்லாமே செம மாஸ். என் இனிய பொன் நிலாவே பாடலை இப்போது கேட்டாலும் மனதுக்கு இதமாக இருக்கும். பிரதாப் போத்தன், மோகன், ஷோபா, காந்திமதி, பானுசந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

இந்தப் படத்தின் இசை கோர்ப்பின் போது இயக்குனர் பாலுமகேந்திரா அவ்வப்போது பல கருத்துகளை சொல்வாராம். அதாவது பின்னணி இசை சேர்க்கும்போது இந்த இந்த இடங்களில் இப்படி இப்படி வந்தால் நல்லாருக்கும்னு சொல்வாராம். இது இளையராஜாவுக்கு 100வது படம் வேறு. பாலுமகேந்திராவின் ஆலோசனைகள் இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை. வளர்ந்து வரும் நம் படைப்பாற்றலை இவர் கட்டுப்படுத்துவது போல அவருக்கு இருந்ததாம்.

உடனே அவர் கேட்டாராம். ஒரு படத்திற்கான இசையைத் தீர்மானிப்பது யார் என்று. சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் அவர் கேட்டவுடன் அவரது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டார் பாலுமகேந்திரா.

Moodupani

Moodupani

அப்போது பாலுமகேந்திரா அமைதியாக இப்படி சொன்னாராம். ஒரு நதி ஆரம்பிக்கும் போது நதி மூலம் என்று சொல்கிறார்கள். அதன் தொடக்கம் முதல் கடலில் கலக்கும் வரை எப்படி எப்படி எல்லாம் செல்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆரம்பிக்கும்போது சிறிய ஊற்றாக, அப்படியே சற்றுத் தள்ளி சென்றால் அருவியாக, அப்புறம் பல சிற்றருவிகள் அதனுடன் கலக்க, காட்டருவியாகிறது. அப்போது அதன் தோற்றம், வேகம் ஆகியவற்றில் ஒரு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. அடுத்ததாக ஒரு பெரிய பாறையில் இருந்து பேரழகுடனும், இரைச்சலுடனும் நீர் வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. அது கண்கொள்ளாக்காட்சியாகிறது.

இன்னொரு இடத்திற்குச் செல்லும் போது அது பரந்த நீர்த்தேக்கமாகிறது. அதிக ஆழத்துடன் அமைதியாகக் காட்சி அளிக்கிறது. அடுத்ததாக கூழாங்கற்களுடன் உரசியபடி குதூகலமாக வழிந்து ஓடுகிறது. அப்போது கேட்கும் சிலுசிலு சப்தம் நம் மனதை கொள்ளை கொள்கிறது. ஒரு சில இடங்களில் பாயும்போது நிலத்தடி நீராகக் காணாமல் போய் விடுகிறது. இப்படி ஆரம்பம் முதல் கடைசி வரை உருமாற்றம் நடந்து கொண்டே வருகிறது. ஆனால் அதன் அனைத்து மாற்றங்களையும் தீர்மானிப்பது நிலத்தின் அமைப்பு தானே என்று பாலுமகேந்திரா தனது விளக்கத்தை முடிக்கிறார். அப்போதே சுகமான சங்கீதத்தைக் கேட்ட பரமதிருப்தியில் இளையராஜா சொக்கிப் போகிறார்.

அடுத்ததாக அவர் தொடர்கிறார். இது போலத்தான் ஒரு படத்தின் இசையும். பின்னணி இசையைத் தீர்மானிப்பது படத்தின் திரைக்கதை தான். அது இசையை மட்டும் அல்ல. ஒளிப்பதிவு, நடிப்பு, படத்தொகுப்பு என அத்தனையையும் அது தான் தீர்மானிக்கிறது என்று சொல்லவும் இளையராஜாவின் கண்களில் தன்னையும் அறியாமல் கண்ணீர் துளிர்க்கிறது. அப்போது அவர் ரசிகனைப் போல எழுந்து நின்று கைதட்டினாராம்.

 

Related Articles

Next Story