நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது கதை, திரைக்கதையும் எழுதுவார். அப்படி சில கதைகளை எழுதி அவரே தயாரிப்பதும் உண்டு. அப்படி அவர் கதை, திரைக்கதை, எழுதி தயாரித்து நடித்த திரைப்படம்தான் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இந்த திரைப்படம் 2002ம் வருடம் வெளியானது.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சுஜாதா, விஜயகுமார், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இமயமலையில் உள்ள பாபாவிடம் மூன்று மந்திரங்களை பெற்ற ரஜினி அது எப்படி பயன்படுத்துகிறார்? இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.

படம் முழுக்க ஆன்மீக சிந்தனைகள் இருந்ததால் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. எனவே இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. தன் திரை வாழ்வில் முதல்முறையாக நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தை திருப்பி கொடுத்தது இந்த திரைப்படத்தில்தான்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த பாக்கியராஜ் 50 வருட விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘படையப்பா பட கதையை எழுதியதும் அதை பாக்யராஜிடம் சொன்னேன். கதை நல்லா இருக்கு.. ஆனால் நீலாம்பரி கேரக்டருக்கு மட்டும் ஒரு சரியான ஆளா செலக்ட் பண்ணிக்கோங்க.. அதை சரியா பண்ணிட்டா படம் ஹிட் ஆயிடும்னு சொன்னாரு.. அதே மாதிரி பாபா கதையை அவரிடம் சொன்னப்ப ‘உங்க ஆன்மீகம் மக்கள்கிட்ட செட் ஆகும்னு தெரியல.. அந்த கதை ரிஸ்க்தான்னு சொன்னாரு.. அவர் ஒரு தீர்க்கதரிசி.. கரெக்டா சொல்லிடுவாரு’ என பேசியிருக்கிறார்.