பொங்கல் ரிலீஸாக கடந்த 14 ஆம் தேதி கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் வா வாத்தியாரே. இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருக்கிறார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
படம் கடந்த வருடமே ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் சில பல காரணங்களால் அதன் ரிலீஸ் தேதி தள்ளி போய்க் கொண்டே இருந்தது. இதற்கிடையில் ஞானவேல்ராஜாவின் கடன் பிரச்சினையால் படம் நிதிமன்ற வழக்கிற்கும் உட்படுத்தப்பட்டது. ஒரு பக்கம் அது சம்பந்தப்பட்ட வழக்கும் நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியிலும் படக்குழு இறங்கியது.
அதனால் ஓரளவு பிரச்சினைகளை முடித்ததும் ஜனவரி 14 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்தார்கள். ஜன நாயகன் ஒரு வேளை ரிலீஸ் ஆகியிருந்தால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் தள்ளிப்போயிருக்கும். ஜன நாயகன் ரிலீஸில் பிரச்சினை இருந்ததனால்தான் வா வாத்தியாரே படத்தை இறக்கினார்கள். படத்தின் கதைப் படி எம்ஜிஆரின் தீவிர ரசிகராக வருகிறார் ராஜ்கிரண். அவருடைய பேரன் தான் கார்த்தி.
எம்ஜிஆரை திரையில் பார்த்து மகிழும் ராஜ்கிரண் கார்த்தியையும் எம்ஜிஆர் போல் மாற்ற விரும்புகிறார். ஆனால் பேரன் கார்த்திக்கு இது ஒரு வெறுப்பை ஏற்படுத்த எம்ஜிஆர் மீது வெறுப்பும் வில்லன் நம்பியார் மீது ஈர்ப்பும் வருகிறது. ஹீரோயிசத்துடன் நம்பியார் குணாதியங்களுடன் வளர்கிறார். ஒரு கட்டத்தில் இது ராஜ்கிரணுக்கு தெரியவர அதன் பிறகு என ஆனது என்பதுதான் கதை.

ஜன நாயகன் வராத வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு கார்த்தியின் வா வாத்தியாரே படமாவது ஓரளவு ஆறுதலை கொடுக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. நலன் குமாரசாமி என்றாலே டார்க் காமெடிதான். அந்த காமெடி இந்தப் படத்தில் மிஸ் ஆகியிருக்கிறது. விமர்சனம் சுமாராக இருந்தாலும் வசூல் ஓரளவு எதிர்பார்த்த அளவுக்கு கிடைத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் திரைவிமர்சகர் புளூசட்டை மாறன் வா வாத்தியாரே படத்தை கலாய்த்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். நலன் சொன்னா உனக்கு எங்கடா போச்சி அறிவு என கார்த்தியை எம்ஜிஆர் மிரட்டுவது போல ஒரு மீம்ஸை வெளியிட்டிருக்கிறார்.




