தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற கலைஞனாக உருவெடுத்தவர் நடிகர் விஜயகாந்த். வில்லனாக அறிமுகமாகி பின் ஹீரோவாக அவதாரம் எடுத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர். கேப்டன் என்ற பெயருக்கு ஏற்ப தமிழ் சினிமாவை கட்டிக்காத்தவர். இன்று அவர் காலமானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்துக்கு அவ்வப்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு கூட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துவிட்டதாக வீடு திரும்பினார் கேப்டன்.
ஆனால் நேற்று சுவாச கோளாறில் பிரச்சினை ஏற்பட்டதாக மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரனா தொற்று இருப்பதாக கூறி வெண்டிலேட்டர் சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி கேப்டன் இன்று காலை இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடலானது சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. வீட்டை சுற்றி போலீஸார் பலத்த பாதுகாப்புடன் இருக்க கேப்டனை பார்க்க ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். கேப்டன் கேப்டன் என்று மக்கள் கூக்குரலிட்டு அழுதபடி நிற்கின்றனர்.
கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்த விஜயகாந்த் இல்லை என்று வந்தவருக்கு தாமாக முன்வந்து உதவி செய்த ஒரு நற்பண்பாளர். அனைவருக்கும் வாயாற சாப்பாடு போட்டு அழகு பார்த்தவர். சமீபத்தில் இறந்த போண்டாமணி மறைவுக்கு பிறகும் கூட அவர் குடும்பத்திற்கு பண உதவியை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
