கண்ணதாசன் வீட்டுக் கல்யாணம்.. கவிஞரை அதிர்ச்சியில் தள்ளிய சின்னப்பா தேவர்…
கவியரசர் கண்ணதாசனும் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அந்த நட்பு எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு உதாரணமான ஒரு சம்பவத்தை கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கண்ணதாசனின் மகளான ரேவதி சண்முகத்திற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் பல நாட்கள் அலைந்தும் திருமண மண்டபம் கிடைக்கவில்லையாம். தனது மகளின் திருமணத்திற்காக அலைந்துகொண்டிருந்த கண்ணதாசனை, தான் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றிற்கு பாடல் எழுத வருமாறு சின்னப்பா தேவர் அழைத்திருக்கிறார். வெகு நாட்கள் ஆகியும் கண்ணதாசன் வரவில்லை.
ஒரு நாள் சின்னப்பா தேவர் கண்ணதாசனின் வீட்டிற்கு ஆள் அனுப்பி கண்ணதாசனை அழைத்து வரச்சொல்லியிருக்கிறார். உடனே கண்ணதாசன், சின்னப்பா தேவரின் அலுவலகத்திற்குச் சென்றாராம்.
கண்ணதாசனை பார்த்தவுடன் சின்னப்பாதேவர் “உனக்காக நான் ஷூட்டிங்கை நிறுத்திவைத்திருக்கிறேன். ஆனால் நீயோ எனக்கு பாட்டெழுதி கொடுக்கமாட்டிக்கிற” என்று கடிந்தாராம். அதற்கு கண்ணதாசன் “என்னுடைய பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்துவிட்டேன். திருமண மண்டபம் கிடைக்கவில்லை. அதனால் அலைந்துகொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார்.
“கல்யாண மண்டபம் கிடைக்கலையா. நீதான் கவிதான்னு ஒரு ஹோட்டல் வச்சிருக்கியே அங்க பண்ணலாமே” என சின்னப்பா தேவர் கூற, அதற்கு கண்ணதாசன் “அங்கே பெரிய இடம் இருக்கிறது. ஆனால் அங்கே மண்டபம் இல்லை” என கூறியிருக்கிறார்.
கண்ணதாசன் இவ்வாறு சொன்ன மறு நிமிடம் சின்னப்பா தேவர் “அவ்வளவுதானே மண்டபம் கட்டிக்கோ” என கூறியபடி அங்கேயே தனது பையில் இருந்து 40,000 ரூபாயை எடுத்து கண்ணதாசனிடம் நீட்டினாராம்.
இது குறித்து அண்ணாதுரை கண்ணதாசன் அப்பேட்டியில் கூறியபோது “அது 1973 ஆம் ஆண்டு. அந்த காலத்தில் 40,000 ரூபாயை வைத்து ஓ எம் ஆர் ரோட்டில் 40 ஏக்கர் வாங்கலாம். அந்தளவுக்கான பணத்தை எனது தந்தைக்கு சின்னப்பா தேவர் தந்தார்” என கூறியிருந்தார்.
சின்னப்பா தேவர் பணம் கொடுத்த பிறகு மண்டபத்தை கட்டி, அந்த மண்டபத்திற்கு தேவர் மண்டபம் என்று பெயர் வைத்தார்களாம். அந்த மண்டபத்தில்தான் கண்ணதாசன் மகளின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அத்திருமணத்தில் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல சின்னப்பா தேவர் கண்ணதாசன் கூடவே இருந்தாராம்.