Connect with us

latest news

கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படம் எப்படி இருக்கு?.. தியேட்டரில் போய் பார்க்கலாமா? வேண்டாமா?

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்றாலே ஒரு முறைக்கு பல முறைகள் பார்த்தால் கூட புரியாத புதிர் கொண்ட பல காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருக்கும். படங்களில் டீகோடிங் என்கிற வார்த்தையே இவரது படங்கள் வந்த பின்னர் தான் அதிகம் பார்க்கப்பட்டன என்றே சொல்லலாம்.

இவர் இயக்கிய மெமன்டோ படத்தை சுட்டுத் தான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கஜினி படத்தை தமிழில் சூர்யாவை வைத்தும் இந்தியில் அமீர்கானை ஏமாற்றியும் எடுத்தார் என பெரிய சர்ச்சையே வெடித்தது.

ஒரு முறை அமீர்கானை பார்த்த கிறிஸ்டோபர் நோலன் என் படத்தின் வசூலை விட உங்கள் படத்தின் வசூல் அதிகமாமே என்றே கூறியதாகவும் சொல்லப்பட்டன.

மேலும், கனவுக்குள் ஒரு உலகமே இருக்கிறது என இன்செப்ஷன் படத்தில் எது நிஜம், எது கனவு என்றே தெரியாமல் கடைசி வரை ரசிகர்களை மட்டுமின்றி பல இயக்குநர்களையே மண்டையை காய வைத்தவர் கிறிஸ்டோபர் நோலன்.

கடைசியாக அவர் இயக்கிய டெனெட் படத்தை பார்த்த இன்ஸ்பிரேஷனில் உருவானது தான் சிம்புவின் மாநாடு படமே. இயக்குநர் வெங்கட் பிரபு டெனெட் படம் என்ற வசனத்தையே அந்த படத்தில் வைத்திருப்பார். இப்படிப்பட்ட நோலன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள ஓப்பன்ஹெய்மர் படம் மீதான எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்து வந்த நிலையில், அதை பூர்த்தி செய்தாரா? இல்லையா? நோலன் என்பதை விரிவாக இங்கே பார்ப்போம்.

கதைக்களம்:

American Prometheus: The Triumph and Tragedy of J Robert Oppenheimer எனும் நாவலை தழுவியே இப்படியொரு பிரம்மாண்ட படத்தை இயக்கி இருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். ராபர்ட் ஜே. ஓப்பன்ஹெய்மர் (சிலியன் மர்ஃபி) மன்ஹாட்டன் நகரில் சோதனை முயற்சியாக உருவாக்கும் அணுகுண்டை தான் அமெரிக்க அரசு ஜப்பானின் ஹீரோஷிமா மற்றும் நாகசாகி மீது பியர்ல் ஹார்பர் சம்பவத்துக்கு பழிவாங்க நடத்துகிறது.

அணு ஆயுத சோதனையில் வெற்றி பெற்ற பின்னர் அவருக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்படுகிறது. அதில், ஓபன்ஹெய்மர் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவரா? இல்லையா? என்கிற வழக்கு அந்த வழக்கில் அவருக்கு என்ன தீர்ப்பு கிடைக்கிறது. மற்றும் அயன்மேனாக நடித்து உலக ரசிகர்களை கவர்ந்த ராபர்ட் டவுனி ஜூனியர் ஸ்ட்ராஸ் எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அறிமுக காட்சியிலேயே இவருக்கும் ஓப்பன்ஹெய்மருக்கும் முட்டிக் கொள்கிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையே ஸ்ட்ராஸின் இடத்தில் தான் ஓப்பன்ஹெய்மர் சந்திக்கிறார், ஒரு பிரஸ்மீட்டில் ஓப்பன்ஹெய்மர் அடிக்கும் ஜோக்கால் கடுப்பாகும் ஸ்ட்ராஸ் இவருக்கு எதிராக சதி வலை ஒன்றை பின்னி இவரது கம்யூனிஸ நண்பர்கள் மூலமாக அணு ஆயுத ரகசியத்தையே விற்று விட்டதாக கிளம்பும் இன்னொரு வழக்கில் சிக்கியும் ஓப்பன்ஹெய்மர் என்ன ஆனார் என்பது தான் இந்த படத்தின் கதை.

படமாக எப்படி இருக்கு?

கலர் டோனில் கதைக்களத்தை வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். எப்போதுமே ஃபிளாஷ்பேக் கதைகளுக்கே பிளாக் அண்ட் ஒயிட் பயன்படுத்தப்படும் நிலையில், அதற்கு கலரையும் நிகழ்கால வழக்கிற்கு கருப்பு வெள்ளையையும் பயன்படுத்தி சினிமா பேட்டர்னிலேயே வித்தியாசத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், படம் முழுக்க காட்சிகளாக விரியாமல், பார்வையாளர்களை வாவ் சொல்ல வைக்காமல், கொட்டாவி விட்டுத் தூங்க வைப்பது போல அறிவியல் பாடம் திரையில் ஓடிக் கொண்டிருப்பது பேட்மேன் டார்க் நைட் படத்தை பார்த்து கிறிஸ்டோபர் நோலனின் ரசிகர்கள் ஆனவர்களுக்கே பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.

ஜப்பானின் ஹீரோஷிமா, நாகசாகியில் குண்டு போடும் காட்சியே காட்டவில்லையேப்பா என்பது தான் ரசிகர்களின் பெரியக்குறையாகவே உள்ளது. ஒரு பக்கம் போர் பதற்றட்டத்தையும் ஒரு பக்கம் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையும் காட்டி இருந்தால் படம் பலருக்கும் பிடித்திருக்கும். ஆனால், கிறிஸ்டோபர் நோலன் எடுத்துக் கொண்ட நாவலுக்கு நீதி சேர்க்கும் விதமாகவும் அமெரிக்காவின் ஆயுத அரசியலை ஆணித்தரமாக பேச வேண்டும் என்பதற்காக இப்படியொரு படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஜாலியாக குடும்பத்துடன் சென்று பார்ப்பவர்களை நிச்சயம் இந்த படம் கவருமா? என்றால் கஷ்டம் தான். ஆனால், குழந்தைகளை அறிவியல் கண்காட்சிக்கு கொண்டு செல்லும் பெற்றோர்களுக்கும், ஆயுத அரசியலையும் மனித நேயத்தையும் சொல்லிக் கொடுக்க நினைப்பவர்களுக்கு ஓப்பன்ஹெய்மர் பயோபிக் கண்டிப்பாக ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஓப்பன்ஹெய்மர் ரேட்டிங்: 3.75/5.

google news
Continue Reading

More in latest news

To Top