அந்த நடிகரைப் போல யாரையுமே பார்க்கல... கமல் அப்படி யாரைச் சொல்றாரு?

கமல் தமிழ்சினிமா உலகமே வியந்து பார்க்கிற ஒரு உன்னதக் கலைஞர். ஆனால் அவரே ஒரு நடிகரைப் பற்றி வியந்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். யாருன்னு பார்க்கலாமா...
ஜெய்சங்கரை மாதிரி மன்னிக்கிற குணம் எல்லாருக்கும் வந்துட்டா இந்த உலகத்துல சண்டையே இருக்காது. ஜெய்சங்கரைப் பற்றி ஒருத்தர் தாறுமாறா பேசிருப்பாரு. மறுநாளே அவரை சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஜெய்சங்கருக்கு அமையும்.
பொதுவா நம்மைப் பற்றித் தப்பா பேசுன ஒரு நபர் நம்மை எதிர்க்க வந்தா நாம என்ன பண்ணுவோம்? அந்த நபரை விட்டு அவசரம் அவசரமாகக் கடந்து போவோம். ஆனா ஜெய்சங்கர் அப்படி இல்லை. அவர் எதிர்க்கவே போவார். யார் இவரைப் பத்தித் தப்பா பேசினாரோ அவர் இவர் எதிர்க்க வரவே அச்சப்படுவார்.
அப்படிப்பட்ட மனிதரின் தோள் மீது கை போட்டுக்கிட்டு, 'நீ என்னைப் பத்தித் தப்பா பேசிருக்க மாட்டேன்னு எனக்கு நல்லாத் தெரியும். யாரோ உன்னைப் பேசச் சொல்லிருக்காங்க. அதுக்காகப் பேசிருக்கே. அதுக்காக எல்லாம் கஷ்டப்படாதே'ன்னு சொல்லி அவரை இவர் தேற்றுவார். இப்படிப்பட்ட பண்பை எந்த நடிகரிடமும் நான் பார்த்ததில்லை.
அதே மாதிரி ஒருத்தரைப் பாராட்டுறதுன்னா உதட்டளவில் என்றைக்கும் பாராட்ட மாட்டார். உளமாறப் பாராட்டக்கூடிய கலைஞர் தான் மக்கள் கலைஞர் என்று தெரிவித்துள்ளார். பாலமுரளி கிருஷ்ணாவின் 'ஒருநாள் போதுமா' என்ற பாடலைக் கமல் ஒரு நிகழ்ச்சியில் பாடியுள்ளார். அப்போது ஜெய்சங்கர் காலதாமதமாக வந்தாராம்.
அப்போது ஜெயலலிதா ஜெய்சங்கரிடம் கமல் பாடிய பாடலைப் பற்றி புகழ்ந்து சொல்ல, அதைக் கேட்டதும் ஜெய்சங்கர் கமலிடம் அந்தப் பாடலை மீண்டும் பாடச் சொன்னாராம். அதைக் கேட்டு ஜெய்சங்கரும், ஜெயலலிதாவும் கமலை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார்களாம்.
அந்த விஷயத்தைப் பற்றி கமல் அவரது நண்பர்கள் பலரிடமும் பகிர்ந்து கொண்டாராம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.