குஷி படத்தில் தந்தைக்காக எஸ்.ஜே.சூர்யா கொடுத்த ஸ்பெசல்… அத நோட் பண்ணீங்களா?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் காலம் கடந்து நிற்கும் எவர்கிரீன் படங்களில் முக்கியமான படம் விஜய் நடித்திருந்த குஷி. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் - ஜோதிகா நடிப்பில் 2000-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம்.

விஜய்யை இயக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாய்ப்புக் கிட்ட அஜித்தின் வாலி படம்தான் முக்கியமான காரணம். வாலி பிரீமியர் ஷோவைப் பார்த்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், எஸ்.ஜே.சூர்யாவை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். அப்படி உருவான படம்தான் குஷி.

கல்கத்தாவில் பிறந்த ஷிவாவும் குற்றாலத்தில் பிறந்த ஜெனிஃபரும் எப்படி சந்தித்துக் கொள்கிறார்கள் என்ற கோணத்தில் தொடங்கும் படத்தின் ஆரம்ப காட்சியில் ஸ்பெஷல் கெஸ்ட் ரோலில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருப்பார்.

வாலியின் சின்ன ரோலில் நடித்திருந்த ஜோதிகாதான் இதில் ஹீரோயின் என்றாலும், முதலில் அந்த கேரக்டரில் நடிக்க இந்தி நடிகை அமீஷா படேலை எஸ்.ஜே.சூர்யா நினைத்தாராம். இந்தப் படத்தின் ஷூட்டின்போது விஜய், ஃபாசில் இயக்கிய கண்ணுக்குள் நிலவு படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்திருக்கிறார் விஜய்.

படத்தில் ஹீரோயின் ஜோதிகாவின் பெயர் ஜெனிஃபர் என்றாலும் அவரது தந்தை 'செல்வி’ என்கிற செல்லப்பெயரில்தான் மகளை அழைப்பார். இதற்குப் பின்னணியில் எஸ்.ஜே.சூர்யாவின் தனிப்பட்ட காரணம் ஒன்றும் இருக்கிறது. செல்வி என்கிற பெயரில்தான் எஸ்.ஜே.சூர்யாவின் அக்காவை அவரின் அப்பா செல்லமாகக் கூப்பிடுவாராம். இதனாலேயே அந்தப் பெயரை படத்தில் ஹீரோயினின் செல்லப்பெயராக வைத்திருப்பார்.

அதேபோலத்தான், ஹீரோயினின் தந்தை பெயரும். இதில், சமரசப்பாண்டியன் என்ற பேரில் விஜயகுமார் நடித்திருப்பார். அந்தப் பெயர் எஸ்.ஜே.சூர்யாவின் தந்தையின் பெயர். மேலும், படத்தில் படிப்பறிவில்லாத தந்தைக்கு ஹீரோயின் கையெழுத்துப் போடவும் சொல்லிக்கொடுப்பார்.

தமிழில் தனது பெயரை சமரசபாண்டியன் என கையெழுத்துப் போடுவார். தந்தையைக் கௌரவிக்கும் வகையில், சமரசபாண்டியன் என விஜயகுமார் கையெழுத்துப் போடுவதை குளோஸ் அப் ஷாட்டில் எமோஷனலாக வைத்திருப்பார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.

Next Story