Dhanush: அடுத்த 3 வருஷத்துக்கு நோ கால்ஷீட்!... தலைவரு அம்புட்டு பிஷி... வரிசைக்கட்டி நிற்கும் 1 டஜன் படங்கள்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:16  )

தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண நடிகர் அறிமுகமாகி தற்போது பாடகர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என ஒரு முழு சினிமா மெட்டீரியலாக மாறி நிற்கின்றார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ராயன். தனது 50வது திரைப்படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்கத்தில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தி வருகின்றாரோ அதே அளவுக்கு நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இரண்டு திரைப்படங்களை இயக்கி இரண்டு திரைப்படங்களிலும் தன்னை நிரூபித்திருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து படங்களை இயக்கி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. மேலும் இப்படத்தில் இருந்து வெளியான 'கோல்டன் ஸ்பேரோ' என்கின்ற பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாக இருக்கின்றது. அடுத்ததாக தான் இயக்க இருக்கும் நான்காவது திரைப்படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

இந்த படத்திற்கு இட்லி கடை என பெயர் வைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் 40% முடிவடைந்து விட்டதாக கூறப்படுகின்றது. இது ஒரு புறம் இருக்க அடுத்ததாக மற்ற இயக்குனர்களின் படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார். அந்த வகையில் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக அருண் மாதேஷ் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், ரப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.

இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 என்ற படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இதெல்லாம் தமிழ் திரைப்படங்கள், இது இல்லாமல் ஹிந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதெல்லாம் நடிகர் தனுஷ் தற்போது கமிட் செய்திருக்கும் திரைப்படங்கள். இது இல்லாமல் மஞ்சுமேல் பாய்ஸ் என்கின்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிதம்பரம் மற்றும் மகாராஜா திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் ஆகியோரிடமும் கதை கேட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படி தமிழ் சினிமாவில் இன்னும் மூன்று வருடங்களுக்கு கால்ஷீட்டே இல்லாத அளவுக்கு படு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ்.

Next Story