கங்குவா கொடுத்த பாடம்!.. தீயா வேலை செய்யும் சூர்யா.. பக்கா லைன்அப்-பா இருக்கே..!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தோல்வியால் துவண்டு போயிருக்கும் சூர்யா மீண்டு எழுவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டு கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது ஒரு குறைதான்.
ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கின்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
சூர்யாவின் கெரியரிலேயே பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். ஆனால் படம் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. அடுத்ததாக இயக்குனர் அமல் நிரட் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் தான் சூர்யா 46 ஆக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வாடிவாசல் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு தயாராக வேண்டிய இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் இப்போது தொடங்க இருக்கின்றது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கின்றது.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா மலையாள இயக்குனர் பாஷில் ஜோசப் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதற்கேற்ற வகையில் இயக்குனர் பாஷில் சமீபத்தில் கொடுத்த பேட்டியிலும் இது குறித்து பேசி இருந்தார்.
இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு நடிகர் சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படி அடுத்தடுத்து பிரபல இயக்குனர்களுடன் ஜோடி சேர்ந்து சூர்யா நடிக்க இருப்பதால் நிச்சியம் இந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். துவண்டு இருக்கும் சூர்யாவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என்று கூறப்படுகின்றது.