Vijay: அப்படியா!.. தளபதி 69-லிருந்து சத்யராஜ் விலகியதுக்கு... விஜய் செஞ்ச அந்த விஷயம் தான் காரணமா?...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:03  )

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் தான் இவரின் இறுதி படம் என்று கூறப்பட்டு வருகின்றது. ஏனென்றால் தமிழக வெற்றி கழகம் என்கின்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கின்றார் நடிகர் விஜய். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் அதனை முறையாக பதிவு செய்து கட்சி தொடர்பான அனைத்து வேலைகளையும் மிக கவனமாக செய்து வருகின்றார்.

அரசியலில் குதித்திருக்கும் காரணத்தால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்து இருக்கின்றார். அதனால் கடைசியாக தளபதி 69 திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு பின்னர் சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என்று முடிவு எடுத்திருக்கின்றார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்பை கொடுத்திருக்கின்றது.

தளபதி 69 ஆவது திரைப்படத்தின் பூஜை கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகின்றார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடிக்க இருக்கின்றார்.

இதை தவிர்த்து பிரியா மணி, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். படத்தின் முதல் ஷெடியூலில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தளபதி 69 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக தளபதி 69 படக்குழுவினர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் முதலில் ஒப்புக்கொண்ட சத்யராஜ் அதன் பிறகு அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது.

ஏற்கனவே நடிகர் சத்யராஜ் நடிகர் விஜய் உடன் இணைந்து தலைவா, மெர்சல் உள்ளிட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து நடிகர் சத்யராஜ் விலகியதற்கு சில காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது. முதலில் கால்சீட் பிரச்சினை காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் உண்மை காரணம் என்னவென்றால் நடிகர் விஜய் முதல் மாநாட்டில் பேசிய விஷயங்கள் பல நடிகர் சத்யராஜுக்கு ஒத்துப் போகவில்லை என்று கூறப்படுகின்றது. நடிகர் விஜய்யின் கொள்கையும் சத்யராஜின் கொள்கையும் வேறு வேறு விதமாக இருப்பதால் இந்த திரைப்படத்தில் ஒருவேளை கட்சி தொடர்பான காட்சிகளில் நாம் நடிக்கும்போது அந்தக் கொள்கைக்கு ஒத்துப் போக வேண்டிய சூழல் ஏற்படுமோ என்று தயங்கிய சத்யராஜ் இப்படத்தில் இருந்து வெளியாகி விட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து இருக்கின்றார்.

Next Story