Amaran: இந்துவுக்கு மட்டும் 'சிலுவை' தெரியுது... முகுந்துக்கு ஏன் மறைச்சீங்க?..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:58  )

Amaran: மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான அமரனில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக முடிவு முன்பே தெரிந்தாலும் கூட, படத்தினை சாய் பல்லவி தன்னுடைய நடிப்பால் தாங்கிப் பிடித்து இருக்கிறார்.

அவரைத்தவிர வேறு ஒருவர் இந்த படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக படம் இவ்வளவு நன்றாக வந்திருக்காது என விமர்சகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியும் பாக்ஸ் ஆபிசில் வசூலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறைவான நாளிலேயே 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து படம் புதிய சாதனை படைத்துள்ளது. நீண்ட நாட்களாக தடுமாறிய கோலிவுட்டையும் சற்று தூக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் படத்தில் மேஜர் முகுந்த் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர் என்பதை மறைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்துவாக வந்த சாய் பல்லவி கழுத்தில் சிலுவையுடன் வருகிறார். ஆனால் முகுந்தாக வரும் சிவகார்த்திகேயன் எந்த அடையாளமும் இன்றி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறார் என, பலரும் சமூக வலைதளங்களில் வெறுப்பை கக்கினர்.

இதற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நேற்று நடைபெற்ற 'அமரன்' படத்தின் வெற்றி விழாவில் பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர், ' முகுந்தின் குடும்பத்தினர் அவர் ஒரு இந்தியன். தமிழன் என்று மட்டும் காட்சிகள் வைத்தால் போதும். முகுந்த் எப்போதும் இந்தியன்னு மட்டும் தான் அடையாளப்படுத்திக்க விரும்புவான் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் தான் அவரின் அடையாளங்களை படத்தில் காட்டவில்லை," என்றார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story