ரஜினி இல்லனா நான் இப்ப சினிமாவில் இல்லை!.. ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதன் பின்னணி!..

by ராம் சுதன் |

மலையாளத்தில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஆர்.கே.சேகர். தமிழிலும் சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரின் மகன் திலீப் குமார். அப்பா இசையமைப்பாளர் என்பதால் சிறு வயது முதலே ஆர்மோனியத்தை வாசித்து இசையை கற்றுக்கொண்டார்.

ஒருகட்டத்தில் திடீரென அப்பா இறந்து போக குடும்பத்தை ஏற்கும் பொறுப்பு சிறுவயதிலேயே திலீப்புக்கு வந்தது. ஏனெனில், குடும்ப வறுமை. இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடமும் கீபோர்டு வாசிக்கும் வேலை செய்தார். 11 வயது முதலே குடும்பத்துக்காக வேலை செய்ய துவங்கினார்.

இளையராஜா இசையமைத்த மூடுபனி, புன்னகை மன்னன் போன்ற படங்களில் திலீப் வேலை செய்திருக்கிறார். அதன்பின் தனியாக ஒரு ஸ்டுடியோவை உருவாக்கி விளம்பர படங்களுக்கு இசையமைக்க துவங்கினார். மணிரத்னம் ரோஜா படத்தை எடுத்தபோது அந்த படத்திற்கு திலீப்தான் இசையமைப்பாளர். அப்போது அவரின் தாய் இஸ்லாமியத்திற்கு மாறியதால் திலீப்பின் பெயர் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறியது.

அசரவைக்க்கும் வெஸ்டர்ன் இசையில் இளசுகளை ஆட்டம் போட வைத்தார். இவர் உருவாக்கிய சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, ஊர்வசி ஊர்வசி போன்ற பாடல்கள் இளசுகளை சுண்டி இழுத்தது. டீன் ஏஜ் வயதினர் ரஹ்மானின் ரசிகர்களாக மாறினார்கள். அதன்பின் பாம்பாய், ஜீன்ஸ், இந்தியன் என அடித்து ஆடினார் ரஹ்மான்.

பாலிவுட்டுக்கும் சென்று அங்கிருந்த இசையமைப்பாளர்களுக்கு செம டஃப் கொடுத்தார். ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளையும் வாங்கினார். ஆஸ்கர் வாங்கிய முதல் இந்திய இசையமைப்பாளர் ரஹ்மான்தான். அவருக்கு பின்னரும் யாரும் அந்த விருதை வாங்கவில்லை. இப்போதும் ராயன் படத்தில் அவர் போட்ட உசுரே பாடல் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இந்நிலையில் ஒரு பட விழாவில் பேசிய ரஹ்மான் ‘நான் 11 வயது முதலே வேலை செய்து வருகிறேன். ஆஸ்கர் விருது வாங்கியாச்சி. 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என நினைத்தேன். அப்போது எந்திரன் படத்திற்கு வேலை செய்தேன். ரஜினி சாரை படப்பிடிப்புக்கு வெளியேயும், படப்பிடிப்பிலும் பார்த்தபோது என் எண்ணத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் ஓட ஆரம்பித்தேன். இந்த வயதில் அவர் இப்படி சுறுசுறுப்பாக உழைப்பதை பார்த்து ரிட்டயர்டு ஆக வேண்டும் என்கிற எண்ணமே போய்விட்டது’ என ரஹ்மான் சொல்லி இருக்கிறார்.

Next Story