கமலிடம் அப்படியா கேள்வி கேட்டு உசுப்பி விட்டாரு... நல்லவேளை ஆண்டவரு சீரியஸா எடுக்கல..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:02  )

கமல் எல்லா பத்திரிகையாளர்களையும் சந்திக்கிறார். விருமாண்டி சண்டியர்னு ஆரம்பிச்ச காலகட்டம். அப்போ வலைப்பேச்சு பிஸ்மியும் போயிருக்கார். அவர் கமலுடன் சந்தித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

அப்போ பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் கமல். நானும் போயிருந்தேன். அப்போ எல்லாருக்கும் 'வணக்கம்' சொல்லிட்டு 'உங்களைப் பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி'ன்னு சொல்லிட்டு உள்ளே போறார். 'சார் இதுக்குத் தான் கூப்பிட்டீங்களா?'ன்னு கேட்டேன்.

உடனே 'டப்'புன்னு திரும்புனாரு. 'இல்ல சார் உங்களை எல்லாம் பேட்டி எடுக்கறதே அபூர்வமான விஷயம். அப்படி இருக்கும்போது வணக்கம் வச்சிட்டு போறீங்களே...'ன்னு கேட்டேன். 'சரி பேசுவோமே..'ன்னு உட்கார்ந்துட்டார். அவரும் பேசிக்கிட்டே இருக்காரு.

நாங்களும் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கோம். அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு. நான் கேட்குறேன். 'நீங்க வந்து சினிமாவுல பெரிய ஜீனியஸ். ஆனாலும் உங்க படம் எல்லாமே வெளிநாட்டுப் படத்தை சுட்டே எடுத்துக்கிட்டு இருக்கீங்களே... அது வந்து உங்களுக்கு ரொம்ப அவமானமா இல்லையா..?'ன்னு எல்லாம் கேட்குறேன்.

அதுக்கும் அவர் பதில் சொல்றாரு. 'அநேகமா தேவர்மகன் தான் உங்க சொந்த சரக்குன்னு நினைக்கிறேன்'னு சொன்னேன். 'இல்ல இல்ல. அதுவும் சுட்டதுதான்'னாரு. அப்புறம் 'ஆளவந்தான் ரொம்ப மொக்கை படம். அந்தப் பழியை தாணு மேல போடுறீங்க..'ன்னு கேட்டேன்.

அவரு சொன்னாரு. 'வாயில மென்ன சாக்லேட்டை கையில எடுத்தா பிசுபிசுன்னு இருக்கும். வேற பேசுவோமே'ன்னாரு. அப்புறம் ஒரு கட்டத்துல இவரு வேற மாதிரி ரிப்போர்ட்டர். வழக்கமான ஆளு இல்லன்னு புரிஞ்சிக்கிட்டாரு. அப்புறம் உலக சினிமாக்கள் பற்றி எல்லாம் பேச ஆரம்பிச்சாரு.

கடைசியில 'எங்கிட்ட நிறைய உலக சினிமாக்களோட வீடியோ இருக்கு. நீங்க எல்லாம் ஒரு இடத்துல அசெம்பிள் ஆகுங்க. அவங்களுக்குப் போட்டுக் காட்டுங்க. அவங்களும் தெரிஞ்சிக்கிடட்டும்னாரு. அது நிச்சயமா ரசனை மாற்றத்தைக் கொடுக்கும்'. அப்புறம் கையைப் புடிச்சிக்கிட்டு 'முக்கியமா யாரும் தூங்கிடாமப் பார்த்துக்கங்க'ன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story