சுண்டல் விற்க சென்னை வந்த கஸ்தூரி ராஜா!.. தனுஷால் மொத்தமா மாறிய வாழ்க்கை.....

by ராம் சுதன் |

இப்போது தனுஷ், செல்வராகவன் என்றால் எல்லோருக்கும் தெரியும். திரையுலகிலும், ரசிகர்களிடமும் பெரிய தாக்கத்தை இருவரும் ஏற்படுத்தியுள்ளனர். துள்ளுவதோ இளமை படத்தை விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் திட்டினார்கள். அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சொன்னார்கள்.

ஆனால், அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஓடிவிட்டதால் அது எடுபடாமல் போனது. அதன்பின் காதல் கொண்டேன் படத்தை எடுத்தார் செல்வராகவன். இந்த படமும் வெற்றி. தனுஷ் அடுத்து நடித்த திருடா திருடி படமோ சூப்பர் ஹிட். சென்னையில் பல நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய படம் இது.

தனுஷ் என்கிற நடிகன் உருவானது இப்படித்தான். இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக தனுஷ் இருக்கிறார். 2 முறை தேசிய விருதுகளையும் வாங்கிய நடிகர் இவர். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என கலக்கி வருகிறார். தேசிய அளவில் தனுஷை எல்லோருக்கும் தெரியும் அளவுக்கு அவரின் உயரம் இருக்கிறது.

இப்போது போயஸ் கார்டனில் தனுஷ் வீடு வாங்கி குடியேறினாலும் அவரின் குடும்பத்தின் ஆரம்ப வாழ்க்கை அப்படி இல்லை. அவரின் அப்பா கஸ்தூரி ராஜா சொந்தமாக சில படங்களை தயாரித்து இயக்கி நஷ்டமடைந்தார். ஒரு கட்டத்தில் சென்னையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே போய் பிழைத்துக்கொள்ளலாம் என்று கூட முடிவு செய்தார்.

ஆனால், இது கடைசி முயற்சி. என் மீது நம்பிக்கை வைத்து பணம் கொடுங்கள் என செல்வராகவன் சொன்னதும் கடன் வாங்கித்தான் துள்ளுவதோ இளமை படத்தை எடுத்தார் கஸ்தூரி ராஜா. அந்த படம் கஸ்தூரி ராஜாவின் குடும்பத்தை காப்பாற்றியது. இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், சொந்த ஊரில் என்ன செய்வது? எப்படி பிழைப்பது? என தெரியாமல் இருந்த கஸ்தூரி ராஜாவுக்கு சென்னை போய் பிழைப்போம் என்கிற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், கையிலோ காசு இல்லை. உறவினர் ஒருவரிடம் 50 ரூபாய் வாங்கிகொண்டு சென்னை வந்தார். மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைத்து கொள்வோம் என்றுதான் முதலில் நினைத்திருக்கிறார். ஆனால், இந்த சென்னை கஸ்தூரி ராஜா குடும்பத்திற்கு என்ன கொடுத்திருக்கிறது என்பதுதான் வரலாறு.

Next Story