Madhagajaraja: சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பே உருவான திரைப்படம்தான் மதகஜராஜா. இப்படத்தை பழம்பெரும் நிறுவனமான ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தை தயாரிக்க வாங்கிய கடனை தயாரிப்பாளரால் கொடுக்க முடியாததால் இப்படம் வெளியாகவில்லை.
இந்த படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, மனோபாலா, மணிவண்னன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதோடு, இந்த படத்தில் வில்லனாக சோனு சூட் நடித்திருந்தார். இந்த படத்தின் போஸ்டர்கள் அப்போதே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வெளியாகவில்லை.
கடந்த 12 வருடங்களாக இந்த படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என சுந்தர்.சி பல முயற்சிகளையும் செய்தார். விஷாலும் சில முயற்சிகள் செய்தார். எதுவும் பலனளிக்கவில்லை. அதன்பின்னர் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் இந்த படத்திற்கு இருந்த பிரச்சனையை பேசி தீர்த்து வைத்தார்.
அதன்படி பொங்கலுக்கு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. சந்தானத்தின் காமெடியும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக நடிக்க வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை வைத்தார்கள்.
எனவே, இனிமேல் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கலாம் என்றும் சந்தானம் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் ரிலீஸாகி 10 நாட்கள் ஆன நிலையில் இப்படம் 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே மதகஜராஜா அதிக வசூலை பெற்ற படமாக மாறிவிட்டது.
அதேநேரம் இந்த படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை இதுவரை விற்பனை ஆகவில்லை. 12 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் என்பதால் யாரும் வாங்க முன்வரவில்லையா என்பதும் தெரியவில்லை. அப்படி வாங்கினால் தயாரிப்பாளருக்கு மேலும் லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.