Cinema News
நாயகனோடு போட்டி போட்ட ரஜினி படம் அதிக வசூல்!.. அட மணிரத்னமே சொல்லிட்டாரே..
நாயகன் படம் வெளியானபோது அப்படத்தை விட ரஜினி படம் அதிக வசூல் செய்தது தெரியவந்திருக்கிறது.
Nayagan movie: எல்லா மொழிகளில் சில படங்கள் மிகச்சிறந்த படங்களாக அமையும். ஆல்டைம் கிளாசிக் மூவி என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதே இயக்குனர், அதே நடிகர் மீண்டும் இணைந்தால் கூட அது போல ஒரு படத்தை திருப்பி கொடுக்க முடியாது. முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, நாயகன் என சில படங்களை அப்படி சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் வந்த சிறந்த இயக்குனர்கள் பட்டியெலெடுத்தால் கருப்பு வெள்ளை காலத்தில் ஸ்ரீதர், திருலோகச்சந்தர், பாலச்சந்தர், பீம்சிங் என சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு பின் 80களில் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா ஆகியோர் வந்தார்கள். பாரதிராஜாவின் திரைப்படங்கள் சினிமா உலகில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியது.
அதேபோல், அழகான கதை, சிறப்பான ஒளிப்பதிவு, இனிமையான பாடல்கள், இயல்பாக நடிக்கும் கதாநாயகன் என அறிமுகமானவர்தான் இயக்குனர் மணிரத்னம். இவர் படங்களில் பக்கம் பக்கமாக யாரும் வசனம் பேசமாட்டார்கள். எல்லாவற்றையும் காட்சிகள் மூலமே சொல்லிவிடுவார். இதை அவருக்கு முன் யாரும் செய்தது இல்லை.
நாடகபாணியில் எல்லாவற்றையும் வசனங்களால் மட்டுமே இயக்குனர்கள் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் குறைவான வசனம், அழகான காட்சி அமைப்புகள், இயல்பான நடிப்பு என கவனம் ஈர்த்தார் மணிரத்னம். அதனால்தான் அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது.
மணிரத்னமும், கமலும் இணைந்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். மும்பையில் டானாக கலக்கிய வரதராஜ முதலியார் என்பவரின் வாழ்க்கை கதையை தழுவி இப்படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கினார் கமல். இப்போதுவரை தமிழில் பேசப்படும் படமாக நாயகன் இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மணிரத்னம் ‘நாயகன் படத்தோடு வெளியான ரஜினியின் ‘மனிதன்’ படம் நாயகனை விட அதிக வசூல் செய்தது. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில், ஹிட் படங்களை கொடுத்து பணத்தை சம்பாதிக்கும் ஆசையில் நான் சினிமாவுக்கு வரவில்லை’ என சொல்லி இருக்கிறார்.