தலைவா உன்ன சந்திச்சத மறக்கவே முடியாது!.. உருகும் மகாராஜா பட இயக்குனர்!...
சினிமாவில் பட வாய்ப்பு என்பது சுலபமில்லை. அதுவும் ஒரு உதவி இயக்குனர் ஒரு நல்ல கதையை வைத்துக்கொண்டு அதை இயக்க போராட வேண்டும். அது நல்ல கதையாகவே இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை வராது. ‘இவரால் இந்த கதையை சரியாக எடுக்க முடியுமா?’ என சந்தேகப்படுவார்கள்.
சிலரோ ‘கதையை மட்டும் கொடுங்கள். உங்களுக்கு பணம் கொடுக்கிறேன்’ என்பார்கள். அனுபவம் இல்லாத உதவி இயக்குனர் எனில் பெரிய ஹீரோக்கள் கால்ஷீட் கொடுக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன்?. கதையை கூட கேட்க மாட்டார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் இங்கே ஒரு நல்ல இயக்குனர் உருவாகிறார்.
அப்படி வந்த இயக்குனர்களில் ஒருவர்தான். நித்திலன் சாமிநாதன். 2017ம் வருடம் வெளியான குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் இவர். இவர் முதலில் ஒரு கதையை உருவாக்கினார். அதை வைத்துக்கொண்டு பல தயாரிப்பாளர்களிடமும் சென்றார். யாரும் இவரை நம்பவில்லை.
அதன்பின் வேறு கதையை உருவாக்கினார். அதுதான் குரங்கு பொம்மை. அந்த படம் வெளியாகி 5 வருடங்கள் கழித்து வெளியாகும் இருக்கும் திரைப்படம்தான் மகாராஜா. இதுதான் அவர் முதலில் இயக்க ஆசைப்பட்ட திரைப்படம். விஜய்சேதுபதியின் 50வது படமாக மகாராஜா வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது.
திரையுலகில் பலரின் பாராட்டையும் இப்படம் பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நித்திலனை அழைத்து நேரில் பாராட்டியிருக்கிறார். இது பற்றி டிவிட்டரில் நெகிழ்ந்துள்ள நித்திலன் ‘உங்களின் அழகான சந்திப்புக்கு நன்றி. உங்களின் சந்திப்பு ஒரு நாவலை படிப்பது போல இருந்தது.
கோலிவுட்டின் தங்க கைகளில் வாழும் ஒருவரின் அனுபவத்தை பேசியது மகிழ்ச்சி. உங்களின் உபசரிப்பு மற்றும் மனிதநேயத்தை பார்த்து நான் திகைத்து போனேன். மகாராஜா படத்தை நீங்கள் இந்த அளவுக்கு நேசித்தது எனக்கு மகிழ்ச்சி. உங்களுக்கு என் நன்றி. நீங்கள் பல வருடங்கள் வாழவேண்டும் தலைவா’ என பதிவிட்டிருக்கிறார்.