காசு மட்டும் வாங்குற!.. நடிக்க மாட்டியா?!. விஷாலை தொடர்ந்து தனுஷுக்கும் செக்!..

by ராம் சுதன் |

சினிமா உலகை பொறுத்தவரை நடிகர்களை வளைத்து பிடிப்பதற்காக தயாரிப்பாளர்கள் பல வேலைகளை செய்வார்கள். அதில் எல்லோரும் செய்வது அட்வான்ஸ் கொடுத்து வைப்பதுதான். சினிமா உலகில் அட்வான்ஸ் வாங்காமல் எந்த நடிகரும் நடிக்க மாட்டார். ஒரு நடிகரிடம் 2 வருடம் கால்ஷீட் இல்லையென்றாலும் கூட சில தயாரிப்பாளர்கள் பின்னால் உதவும் என நினைத்து அட்வான்ஸ் கொடுத்து வைப்பார்கள்.

இதில் ரஜினி, விஜய், அஜித் மட்டுமே ஒரு படம் உறுதியான பின்னர் அந்த தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்குவார்கள். மற்ற நடிகர்கள் எல்லாம் எந்த தயாரிப்பாளர் எப்போது அட்வான்ஸ் கொடுத்தாலும் வாங்கி பையில் போட்டு கொள்வார்கள். சில நடிகர்களுக்கு தயாரிப்பாளரிடம் வாங்கி அட்வான்ஸ் மறந்தே போயிருக்கும்.

சின்ன நடிகர் என்றால் மிரட்டி நடிக்க வைத்துவிட முடியும். இதுவே, பெரிய நடிகர் எனில் அது முடியாது. அந்த நடிகராக பார்த்து மனது வைத்தால் மட்டுமே படம் டேக் ஆப் ஆகும். சினிமாவில் பெரிய படங்களை தயாரித்து வரும் லைக்காவிடமே நடிகர் விஷால் அட்வான்ஸாக சில கோடிகளை வாங்கி சில வருடங்கள் ஆகிவிட்டது.

ஆனால், இப்போது வரை கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். எனவே, விஷாலுக்கு எதிராக லைக்கா நிறுவனம் நீதிமன்றத்திற்கும் போனது. ஆனால், விஷால் அசரவில்லை. இதில், முக்கிய விஷயம் என்னவெனில், நடிகரானாலும் சரி, நடிகையானாலும் சரி.. வாங்கிய அட்வான்ஸை திருப்பி தரமாட்டார்கள்.

‘நான் உங்களுக்காக காத்திருந்தேன்.. நீங்கள் படத்தை எடுக்கவில்லை’ என சொல்லும் நடிகர்களும் இருக்கிறார்கள். தற்போது இந்த பிரச்சனையில் தனுஷும் சிக்கி இருக்கிறார். இவர் பல தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார். ஆனால், கால்ஷீட் கொடுக்கவில்லை.

எனவே, பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருப்பதால் இனி அவர் நடிக்கும் படங்களின் பணிகளை துவங்கும் முன் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பும் விஷாலுக்கு எதிராக இதுபோல தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story