நடிகரின் துணியை துவைத்து போட்டு காசு வாங்கிய சிவாஜி கணேசன்! - இவ்வளவு கஷ்டப்பட்டாரா!..
நடிகர் திலகம் என ரசிகர்களிடம் பட்டம் வாங்கியவர் சிவாஜி கணேசன். சினிமாவில் இவர் ஏற்காத வேடமே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் அசத்தி இருக்கிறார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்புக்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் இவர்.
சாமானியன் முதல் கடவுள் அவதாரம் வரை நடிகர் திலகம் ஏற்காத வேடமே இல்லை என்றே சொல்லலாம். நடிகர் திலகம் அந்த உச்சத்தை ஒரே நாளில் பெற்றுவிடவில்லை. அதற்கு பின்னால் பல வருட உழைப்பும், பயணமும், தொழில் பக்தியும் இருக்கிறது. சிறு வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு நாடகத்திற்கு போனார்.
அப்பா, அம்மா இருக்கிறார்கள் என்று சொன்னால் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என நினைத்த சிவாஜி ‘நான் ஒரு அனாதை’ என சொல்லியே நாடக கம்பெனியில் சேர்ந்தார். சிறு வயது முதலே நாடகங்களில் பல வேஷங்களையும் போட்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சினிமாவை விட அதிக வேடங்களில் நாடகங்களில் நடித்திருக்கிறார்.
அப்போதெல்லாம் நாடகங்களில் நடிப்பவர்களுக்கு சம்பளம் கிடையாது. மூன்று வேளை சாப்பாடு மட்டுமே போடுவார்கள். மிகவும் முக்கியமான நடிகர்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படும். சிவாஜிக்கெல்லாம் சம்பளம் கிடையாது. எனவே, அங்குள்ள சீனியர் நடிகர்களின் துணியை துவைத்து கொடுத்தால் பணம் கொடுப்பார்கள்.
நாடகத்தில் சிவாஜிக்கு சீனியராக இருந்தவர் வி.கே. ராமசாமி. அவரின் துணியை சிவாஜி துவைத்து கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை வாங்கி ஜாலியாக செலவழிப்பாராம். செலவு எனில் வெளியே போவது, விரும்புவதை வாங்கி சாப்பிடுவது, சினிமாவுக்கு போவது என செலவழிப்பாராம்.
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்ந்த சிவாஜி பராசக்தி திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.