ஐபிஎஸ் ஆக ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன்!.. டிராக் மாறியது எதனால் தெரியுமா?!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:26  )

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்து சிவகார்த்திகேயன் படங்கள் அதிக வசூலை பெற்று வருகிறது. சம்பளத்திலும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிறார். குறுகிய காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவர் கல்லூரியில் படிக்கும்போதே அவரின் அப்பா திடீரென இறந்துவிட்டார். கல்லூரி படிப்புக்கு பின் இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து வந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஆங்கராக வேலைக்கு சேர்ந்தார்.

சில வருடங்கள் விஜய் டிவியில் வேலை செய்த சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. பல சினிமா கம்பெனிகளிலும், இயக்குனர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்டார். ஒருவழியாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அதன்பின் சில படங்களில் நடித்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் நல்ல வசூலை பெற்றது. அதன்பின் வெளிவந்த ரஜினி முருகன் படமும் சூப்பர் ஹிட் அடிக்க சிவகார்த்திகேயனின் கிராஃப் மேலே போனது. ஒரு கட்டத்தில் சொந்த படம் எடுக்கும் அளவுக்கு முன்னேறினார். அதுதான் அவரை பல கோடி கடனாளியாக மாற்றியது.

தற்போது அந்த கடனிலிருந்து மீண்டுவிட்டார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. எனவே, இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். அப்போது அவர் பல தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ‘ஐபிஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பது என் குறிக்கோளாக இருந்தது. அப்பாவின் இழப்புக்கு பின் அம்மா ‘இதெல்லாம் வேண்டாம்.. ஒருவரை இழந்தது போதும்’ என சொல்லிவிட்டார். இல்லையெனில் இன்ஜினியரிங் முடித்ததும் கோச்சிங் கிளாஸ் போய் ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே என் திட்டமாக இருந்தது’ என சொல்லி இருக்கிறார்.

Next Story