GBU: பில்லாவுக்கு அப்புறம் இந்த படம் தான்!... வேறொரு அஜித்தை பாப்பீங்க... அட இவரே சொல்லிட்டாரே!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:22  )

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமா, கார் ரேஸ் என இரண்டிலும் பிஸியாக இருந்து வருகின்றார். சினிமா எந்த அளவுக்கு நடிகர் அஜித்துக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு கார் மற்றும் பைக் ரேஸ் மீது அலாதி பிரியம் கொண்டவர். புதிதாக கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் தமிழ் சினிமாவில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகின்றார். மேலும் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகின்றது.

படம் ஆரம்பமான முதலே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் மிகுந்த தாமதமாகி இருக்கின்றது. சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படுகின்றது. விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகிவிட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விடாமுயற்சி திரைப்படத்தை காட்டிலும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீதுதான் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த 2 திரைப்படங்களிலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வரும் சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் youtube நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் இந்த 2 திரைப்படம் குறித்தும் பேசி இருந்தார். அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது 'விடாமுயற்சி திரைப்படம் தாமதமானதற்கு காரணம் லொகேஷன் தான். அங்கு இருந்த சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் மகிழ்திருமேனி ஒவ்வொரு காட்சியையும் இப்படத்தில் செதுக்கி வருகின்றார். இப்படத்தில் நடிகர் அஜித்தை வேறொரு கதாபாத்திரத்தில் நீங்கள் பார்க்கலாம்.

விடாமுயற்சி திரைப்படம் அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும். இரண்டு வருடம் தாமதமான காரணத்தால் பலரும் பல காரணங்களை கூறி வருகிறார்கள். ஆனால் அது எல்லாம் உண்மை அல்ல. படப்பிடிப்பின் போது உண்மையாக விபத்து நடந்ததுதான். ஆனால் அந்த விபத்தையும் நாங்கள் ஒரு ஆக்சன் காட்சியாக மெருகேற்றி இருக்கின்றோம்.

கூடிய விரைவில் படம் வெளியாகும். இது அஜித் அவர்களின் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையும். அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் ஒரு பக்கா கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும். அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்திற்கு பிறகு வேறு ஒரு ஸ்டைலில் அஜித்தை நீங்கள் இப்படத்தில் பார்ப்பீர்கள்' என்று அந்த பேட்டியில் இரண்டு திரைப்படங்கள் குறித்தும் பேசியிருந்தார். இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Next Story