யாரு அடி வாங்குறது!. ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான்!. கங்குவா புரமோஷனில் அலார்ட் ஆன சூர்யா!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:13  )

Kanguva: தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய அளவில் சூப்பர்ஸ்டார் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் மட்டுமே. பல வருடங்களாக இந்த பட்டம் அவரிடம் இருக்கிறது. ஆனால், அந்த பட்டத்தை அவர் எப்போதும் தன்னுடையது என நினைத்தது இல்லை என்றுதான் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

ரஜினிக்கு இந்த பட்டத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. 80களில் ரஜினியின் படங்களை வாங்கி வினியோகம் செய்து வந்தார் தாணு. அதில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ரஜினியின் படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. இதைத்தொடர்ந்தே ரஜினிக்கு அந்த பட்டத்தை அவர் கொடுத்தார்.

ஆனால், எந்த ஹீரோவின் படங்கள் தொடர்ந்து வசூலை குவிக்கிறதோ அவரே சூப்பர்ஸ்டார். அது மாறிக்கொண்டே இருக்கும். நாளை இந்த பட்டம் வேறொரு ஹீரோவிடம் போகும் என 25 வருடங்களுக்கு முன்பு ரஜினியே ஒரு விழாவில் பேசி இருக்கிறார். ஆனால், இதுவெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு தெரியாது.

சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினி மட்டுமே என சொல்லுவார்கள். திரையுலகிலும் இப்போதுள்ள நடிகர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்லுவார்கள். அது ரஜினியின் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையாகவே பார்க்கலாம். அதேநேரம், வாரிசு பட விழாவில் ‘விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்’ என அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சரத்குமார் இருவரும் பேசினார்கள். அதற்கு விஜய் எந்த மறுப்பும் சொல்லவில்லை.

இது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்து டிவிட்டரில் அவர்களும் விஜய் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். ஜெயிலர் பட விழாவில் ‘காக்கா கழுகு’ கதையை ரஜினி பேசி அவர் விஜயைத்தான் சொல்கிறார் என விஜய் ரசிகர்கள் கோபப்பட்டனர். அன்று முதல் இப்போது வரை ரஜினியை டிவிட்டரில் அசிங்கமான ஹேஷ்டேக் மூலம் திட்டி டிரெண்டிங் செய்து சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.

லியோ பட விழாவில் ‘ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான்’ என விஜய் சொன்னாலும் இந்த பஞ்சாயத்து இன்னமும் நிற்கவில்லை. இதற்கிடையில் கங்குவா படத்தின் புரமோஷன் மும்பையில் நடந்தபோது அந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி தியோல் ‘சூப்பர்ஸ்டார் சூர்யா’ என சொல்ல அலார்ட் ஆன சூர்யா உடனே எழுந்து ‘எங்களை பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டுமே. ஒருவரின் பட்டத்தை எடுத்து இன்னொருவருக்கு சூட்ட முடியாது’ என கூறியிருக்கிறார்.

Next Story