விடாமுயற்சிக்கு தேதி குறித்த படக்குழு!. ஆனாலும் எல்லாம் திரிஷா கையில் இருக்கு!...
Vidamuyarchi: அஜித் படங்கள் என்றாலே பல வருடங்கள் படப்பிடிப்பு நடக்கும் என்கிற இமேஜை வலிமை படம் உருவாக்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒன்றரை வருடங்களுக்கும் மேல் நடந்தது. கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்பு தாமதமானதால் நிறைய நடிகர், நடிகைகள் படத்திலிருந்து விலகியது என பல காரணங்கள் சொல்லப்பட்டது.
ஒருபக்கம் அரசியல்வாதிகளின் பிரச்சாரம், கிரிக்கெட் மைதானம் என அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்காத இடமே இல்லை. ஒருபக்கம் இப்படத்தை தயாரித்த போனிகபூரும் இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. ஒருவழியாக வெளியான வலிமை படம் ரசிகர்களை ஏமாற்றியது.
தற்போது அதே நிலைமை விடாமுயற்ச்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அஜித்தின் துணிவு படம் வெளியாகி 20 மாதங்கள் ஆகிவிட்டது. துணிவு பட ரிலீசுக்கு பின் விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டு இப்போது வரை முடியவில்லை. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க அஜித்துக்கு ஜோடியாக திரிஷா, வில்லனாக அர்ஜுன் என அறிவிப்பெல்லாம் வெளியானது.
அஜர்பைசான் நாட்டுக்கு பறந்து சென்ற படக்குழு அங்கேயே தங்கி படப்பிடிப்பை நடத்தியது. இடையில் இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்க படப்பிடிப்பு நின்று போனது. இதனால் லியோ, தக் லைப் ஆகிய படங்களில் நடிக்கப்போனார் திரிஷா. அஜித்தோ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போனார்.
ஒருவழியாக சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. ஆனாலும், சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் எடுக்க வேண்டியிருப்பதாக சொல்லப்பட்டது. இதற்காக படக்குழு ஸ்பெயின் நாட்டுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியானது.
குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடி திரிஷாதான். எனவே, திரிஷாவும் இப்போது ஸ்பெயின் நாட்டில்தான் இருக்கிறார். எனவே, ஸ்பெயின் நாட்டில் பாடல் காட்சியை எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை பாடல் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் நவம்பர் 17ம் தேதி படக்குழு மீண்டும் அசர்பைசான் நாட்டுக்கு செல்லும் என சொல்லப்படுகிறது. அனேகமாக இந்த படம் 2025 மே 1ம் தேதி வெளியாகும் என நம்பப்படுகிறது.