பாரம்பரிய கலைநிகழ்ச்சியுடன் தொடங்கிய மாநாடு... விஜய் போடும் 19 தீர்மானங்கள்
தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் தளபதி விஜய் இன்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான மாநில மாநாட்டை நடத்தி வருகிறார். பறை இசை உளளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியுள்ளது.
விஜய் மாலை 4 மணிக்கு மேடைக்கு வந்து 4.30 மணிக்கு 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ரிமோட் மூலம் ஏற்றுகிறார். அரசியல் ரீதியான கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக விஜயின் பேச்சு இருக்கும் என்று தெரிகிறது.
விஜயின் கொள்கை என்ன என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கட்சிக்கான கொள்கைப் பாடல் லேசாக சில விஷயங்களைத் தெரிவித்துள்ளது. மாநாட்டில் 19 தீர்மானங்கள் இருக்குமாம்.
இரு மொழிக் கொள்கைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. விஜயின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா கலந்து கொள்கின்றனர். மாநாட்டுக்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியுள்ளனர்.
10 கிலோ மீட்டர் தூரத்திலேயே வாகனங்கள் இடவசதி இல்லாமல் நிறுத்தப்பட்டதால் நடந்தே வருகிறார்களாம். மேலும் குடிக்க தண்ணீர் வசதி இல்லாமல் கழிப்பறைக்கான தண்ணீரைக் குடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக படங்களில் அரசியல் சார்ந்த வசனங்களைத் தெறிக்க விட்ட விஜய் இந்த மாநாட்டில் என்ன சொல்லப் போகிறார் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். குழந்தைகள், மகளிர் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வர தீர்மானம், ஆளுநரைக் கண்டிப்பது என சில முக்கிய விஷயங்கள் மாநாட்டில் இடம்பெறும் என்றும் தெரிகிறது.
விஜய் கட்சியைத் தொடங்கியதில் இருந்தே தனது கொள்கை என்ன? அரசியல் நிலைப்பாடு என்னன்னு இதுவரை சொல்லவில்லை. எல்லாம் மாநாட்டில் தான் என்று சொல்லிவிட்டார்.
கட்சிக் கொடி அறிமுகவிழாவில் கூட சொல்லவில்லை. அதுதவிர இதுவரை மக்கள் மத்தியில் அவர் எந்த மேடையிலும் அரசியல் குறித்துப் பேசியது இல்லை. இப்போது தான் முதல் மாநில மாநாடு. அதுவும் மெர்சலாக நடந்து வருகிறது.