நம்ம படம் ரிலீஸாகணும்!.. மன்னிப்பு கேட்ருவோம்!.. கார்த்தியை கலாய்க்கும் புளூசட்ட மாறன்...

நடிகர்கள் சர்ச்சையான விஷயங்களில் சிக்குவது, அவர்களை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மன்னிப்பு கேட்க சொல்வது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால், எல்லோரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். சில சமயம் தங்களின் படங்களில் சில மாநிலங்களில் வெளியாக வேண்டும் என சில நடிகர்கள் மன்னிப்பு கேட்பார்கள்.

கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்காமல் பிரச்சனை செய்தபோது சென்னையில் நடிகர் சங்கம் தொடர்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் மிகவும் காட்டமாக பேசியிருந்தார் நடிகர் சத்தியராஜ். பல வருடங்கள் கழிது ராஜமவுலி இயக்கத்தில் சத்தியராஜ் நடித்திருந்த பாகுபலி படம் கர்நாடகாவில் வெளியானது போது சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தன்னால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என நினைத்த சத்தியராஜ் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அதன்பின்னரே கர்நாடகாவில் பாகுபலி படம் வெளியானது. அதேபோல், ரஜினியும் அவரின் படம் வெளியானபோது இதேபோல் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், இதே போன்ற சூழ்நிலையை நடிகர் கார்த்தியும் சந்தித்திருக்கிறார். ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் லட்டை தயாரிக்க பயன்படும் நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் இந்த பாவத்தை போக்குவதற்காக விரதம் இருக்கப்போவதாக தெரிவித்தார்.

மேலும். ஜெகன் மோகன் ஆட்சியில்தான் இது நடந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். ஒருபக்கம், நடிகர் கார்த்தி ஒரு சினிமா நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றிருந்தபோது அவரிடம் ஆங்கர் லட்டு தொடர்பாக ஏதோ சொல்ல ‘லட்டு பற்றி பேசக்கூடாது.. அது சென்சிபிள் மேட்டர்’ என சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் கார்த்தி.

இது பவன் கல்யாணுக்கு கோபத்தை ஏற்படுத்த ‘இதில் உங்களுக்கு என்ன ஜோக். சனாதன தர்மம் பற்றி பேசும்போது 100 முறை யோசித்து பேச வேண்டும்’ என பொங்கியிருந்தார். இதையடுத்து ‘எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். வெங்கடேச பெருமானின் பக்தன் என்கிற முறையில் நமது மரபுகளை கடைப்பிடித்து வருகிறேன்’ என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் கார்த்தி.

இதையடுத்து ‘எவன் நம்மள பத்தி என்ன சொன்னா என்ன?. பக்கத்து ஸ்டேட்ல நம்ம படம் ரிலீஸாகணும். அதனால, மன்னிப்பு கேட்ருவோம்.. இல்லனா பேன் இண்டியா ஸ்டார் ஆக முடியாது’ என கலாய்த்திருக்கிறார் பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன். கார்த்தியின் மெய்யழகன் படம் ஆந்திராவிலும் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it