தொடர் தோல்விகளை கொடுக்கும் விஜய் ஆண்டனி!.. இதுதான் காரணமா?!...
Vijay antony: சினிமாவில் சவுண்ட் என்ஜினியராக வேலை செய்து வந்து பின்னர் இசையமைப்பாளராக மாறியவர் விஜய் ஆண்டனி. பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். விஜயின் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் மற்றும் வேலாயுதம் படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனிதான்.
நகுல் நடித்து வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்த ‘நாக்க மூக்க’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இப்படி தொடர் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி திடீரென நடிகராக மாறினார். அப்படி அவர் அறிமுகமான முதல் படமான ‘நான்’ சூப்பர் ஹிட் அடித்த்து. இது ஒரு கிரைம் திரில்லர் படமாக வெளிவந்தது.
அதன்பின் விஜய் ஆண்டனி நடித்து வெளியான சலீம் படமும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிப்படங்களை கொடுத்ததால் விஜய் ஆண்டனியை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் ஆசைப்பட்டனர். ‘சொல்லாமலே’ சசி இயக்கிய பிச்சைக்காரன் படம் விஜய் ஆண்டனிக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படம் தெலுங்கிலும் ஹிட் அடிக்க விஜய் ஆண்டனியின் படங்கள் தொடர்ந்து ஆந்திராவில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதன்பின் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்தார். இந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
ஆனால், அதன்பின் அவரின் நடிப்பில் வெளியான ரத்தம், கொலை, ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் வெற்றியை பெறவில்லை. சரியான கதையை விஜய் ஆண்டனி தேர்வு செய்யவில்லை, இயக்குனரின் வேலையில் அவர் தலையிடுகிறார். படத்தின் எடிட்டிங்கை அவரே செய்கிறார் என பல தகவல்கள் சொல்லப்படுகிறது.